சேலம் மாவட்டம், ஏற்காட்டில் தமிழக பல்கலைக்கழக கல்லூரி எஸ்.சி-எஸ்.டி ஆசிரியர் மற்றும் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டமும், சேலம் மண்டலம் கிளை பொறுப்பாளர்களின் பதவியேற்கும் விழாவும், முனைவர் பட்டம் பெற்ற பேரசிரியர்களுக்கு பாராட்டு விழாவும் நடைப்பெற்றது.
விழாவிற்கு வருகை புரிந்தோரை அரசு கலைக்கல்லூரி கிளைச் செயலர் முனைவர் பிச்சைமுத்து வரவேற்றுப் பேசினார். ஆண்டறிக்கையையும், தீர்மானத்தையும் சங்கத்தின் மாநில பொருளாளர் முனைவர்.மாறவர்மன் வாசித்தார். விழாவிற்கு உள்துறை அமைச்சகத்தின் தேசிய விவகாரங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர் மைய இயக்குனர் சசிக்குமார், முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஸ்துதாஸ் காந்தி, உள்துறை அமைச்சக கூடுதல் ஆணையாளர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
விழாவில் ஏழாவது ஊதியக் குழுவை உடனடியாக தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும், கெளரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரப்படுத்த வேண்டும், பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் சுவாமிநாதன் சிறப்பாக பணியாற்றியதற்காக அவரை பாராட்டுவது, பெரியார் பல்கலைக் கழகத்தில் எஸ்.சி-எஸ்.டி செல்லை ஏற்படுத்த கோரி வலியுறுத்துவது, பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற கோருவது, அரசு கலைக்கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் பணிமூப்பு பட்டியலை உடனடியாக வெளியிடக்கோருவது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.
பின்னர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள பேராசிரியர்களில் 40 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இதற்காக அவர்களை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது. சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சேலம் மண்டல மற்றும் கிளை பொறுப்பாளர்கள், நிர்வாக குழுஉறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். நிறைவாக கிளை தலைவர் முனைவர் கி.குணசேகரன் நன்றி கூறினார்.
-நவீன் குமார்.