திமுக தலைவர் கருணாநிதி தன் நலம் என்றால் தமிழகத்தை அடகு வைப்பார், பொது நலம் என்றால் அமைதி காப்பார் என தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மதுரை – சிவகங்கை சாலை சந்திப்பு சுற்றுச்சாலை அருகே இன்று மாலை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா பேசியதாவது:
கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதவிர தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாத பல்வேறு திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக அரசு மக்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், குடும்ப நலன் ஒன்றே குறிக்கோளாக கொண்டு செயல்படுவர் கருணாநிதி.
மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பாசன வசதியை தரும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியிலிருந்து தற்காலிமாக 136 அடி குறைக்கப்பட்ட பின்னர், மீண்டும் 152 உயர்த்தப்பட்ட முழு மூச்சுடன் செயல்பட்டு வருவது அதிமுக மட்டுமே.
முல்லை பெரியாறு அணை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அணையில் 142 வரை நீரை சேமித்து வைக்கலாம் என கடந்த 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. மேலும், அணையை பலப்படுத்தும் பணியை மேற்கொள்ளவும், நிபுணர்களின் முடிவுக்குப் பின்னர் முழு கொள்ளவான 152 அடி வரை நீரை சேமிக்கலாம் என்றும் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மதிக்காமல், 136 அடி வரை மட்டுமே நீரை சேமிக்கும் வகையில் கேரள அரசு சிறப்பு சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது. இதை எதிர்த்து 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் திமுகவும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தல் பிரசாரத்தின் போது, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும் என இரு கட்சிகளும் வாக்குறுதி அளித்தன.
தேர்தல் வெற்றி பெற்று ஆட்சி வந்தததும், திமுக தனது வாக்குறுதியை மறந்துவிட்டது. அப்போது மத்தியில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில் திமுகவும் இடம் பெற்றிருந்தது.
அப்போது கேரள அரசு முல்லை பெரியாறு அணைக்குப் பதில் புதிய அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தியது. அதற்கு அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும் அனுமதி அளித்தது.
ஆனால், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த கருணாநிதி மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சரை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றார். பின்னர் கேரள அரசை கண்டித்து பொதுக்கூட்டம் என்றார். கடைசியில் அதுவும் நடைபெறவில்லை.
திமுக தலைவர் கருணாநிதி தன் நலம் என்றால் தமிழகத்தை அடகு வைப்பார், பொது நலம் என்றால் அமைதி காப்பார்.
இந்நிலையில் முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்வதற்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் தமிழக பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என திமுக பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. இதைக் கண்டித்து அதிமுக சார்பில் அறிக்கை வெளியிட்ட பின்னர், தமிழகத்தின் சார்பில் ஏ.ஆர்.லட்சுமணன் நியமிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து 2011 ஆம் ஆண்டில் அதிமுக மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றதும், உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தமிழக அரசு சிறப்பான வாதங்களை எடுத்து வைத்தது. இதனால், முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதன்பின்னர் அணையின் ‘ஷட்டர்கள்‘ இறக்கப்பட்டு, 21.11.2014 அன்று, 35 ஆண்டுகளுக்குப் பிறகு முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்கப்பட்டது.
இதனிடையே முல்லை பெரியாறு அருகே புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு மதிப்பீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதை திரும்பப் பெற அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. உச்ச நீதிமன்றத்திலும் மனுதாக்கல் செய்யப்பட்டது. பின்னர் சுற்றுச் சூழல் ஆய்வு மதிப்பீட்டுக்கு வழங்கப்பட்ட அனுமதி நிறுத்தப்பட்டது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அணையை பலப்படுத்தும் பணிகளுக்கான ஒப்புதல் பெறப்பட்டு, ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. இதனால் அணையில் 152 அடிக்கு நீர் தேக்கப்படும் என்ற உறுதியை நான் இன்று அளிக்கிறேன்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக அணையில் 142 அடிக்கு நீர் தேக்கப்பட்டு வரும் நிலையில், திமுகவின் அறிவிப்பு எனக்கு புரியவில்லை.
முல்லை பெரியாறு அணையில் துரோகம் செய்த திமுகவினரும், காங்கிரஸ் கட்சியினரும் வாக்கு கேட்டு வருவார்கள். அவரை விரட்டி அடிக்க வேண்டும் என்றார்.
-ஆர்.அருண்கேசவன்.