தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஊடகமான ‘நக்கீரன்’ இணையத்தளத்தில், 08.05.2016 அன்று, “தி.மு.க. வெற்றி பெற பாடுபடுவோம்: விஜய் மக்கள் இயக்கம் தீர்மானம்” என்ற செய்தி பதிவானது.
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் எந்த கூட்டணிக்கு ஆதரவு? யாருக்கு ஆதரவு? என்ற அறிவிப்பு தங்களிடமிருந்து அதிகாரப்பூர்வமாகவும், பகிரங்கமாகவும் வராத நிலையில், தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பில்லா ஜெகன் தலைமையில், இந்த தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற ரசிகர்கள் அனைவரும் தீவிரமாக பணியாற்றுவோம் என்று தீர்மானம் நிறைவேற்றி, தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பில்லா ஜெகன் தலைமையில், தங்கள் ரசிகர்கள் ஊர்வலமாக சென்றுள்ளனர். அங்கு திருச்செந்தூர் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து சால்வை அணிவித்து திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது குறித்து தங்கள் விருப்பத்தையும், விளக்கத்தையும் பகிரங்கமாக அறிவிக்கலாமே? என்று திரைப்பட நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோரிடம் கேட்டிருந்தோம்.
இந்நிலையில், அகில இந்திய இளையதளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி என்.ஆனந்து இன்று (09.05.2016) வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் ‘இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம்‘ நடுநிலையை வகிக்க முடிவு செய்துள்ளது. அதாவது, எந்தக்கட்சிக்கும் நாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு அளிக்கவில்லை. அதே சமயம் இளையதளபதி ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்கு தகுந்தாற்போல, தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கலாம். ஆனால் இளையதளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, கொடியையோ பயன்படுத்தக்கூடாது. இந்த நிலைபாட்டை நான் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களை நேரில் அழைத்தும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் தெளிவுபட கூறி இருக்கின்றேன்.
மேலும், இயக்கத்தின் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது, இயக்கத்தின் சார்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி இருக்கின்றேன். இந்நிலையில் சில ஊடகங்களில் இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு அளித்ததுபோல் செய்திகள் வருகின்றன. அது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை தெளிவுபட தெரிவித்துக்கொள்கிறோம்.
எனவே இளையதளபதி விஜயின் ரசிகர்கள், எந்தவித குழப்பமும் அடையாமல் தங்கள் விருப்பம்போல் வருகின்ற சட்டமன்ற தேர்தலில், தங்கள் விருப்பமான கட்சிக்கு வாக்களிக்கலாம் என தெரிவித்துக் கொள்கிறேன். இளையதளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, கொடியையோ எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது என்று மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com