தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப் பொருட்களும் விநியோகிக்கப்படுவதாக வந்த புகாரின் பேரில், அந்த தொகுதிகளில் மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அங்கு 23–ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்று, 25–ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இதனால் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதி தவிர, மற்ற 232 தொகுதிகளிலும் இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்நிலையில் நடிகர் அஜித் இன்று காலை வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பே முதல் ஆளாக வந்து சென்னை, திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடிக்கு தனது வாக்கை பதிவு செய்ய வந்திருந்தார்.
அஜித் வாக்கு பதிவு மையத்திற்கு வந்ததும் அவரது ரசிகர்கள் அவரைப் பார்க்க முண்டியடித்தனர். பின்னர், அஜித்தை போலீசார் பத்திரமாக வாக்குப் பதிவு மையத்திற்குள் அழைத்து வந்தனர். பின்னர், சிறிது நேர காத்திருப்புக்குப் பின் அஜித் தனது வாக்கை பதிவு செய்தார். அஜித்துக்கு முன்னதாக சிலர் வாக்கு பதிவு செய்ய காத்திருந்தனர். பின்னர், அஜித் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். அவருடன் அவரது மனைவி ஷாலினி மற்றும் அவரது அம்மாவும் தங்களது வாக்கை பதிவு செய்தனர். அதேபோல், நடிகர் ரஜினிகாந்தும் காலையிலேயே தனது வாக்கை பதிவு செய்தார். வாக்கை பதிவு செய்ய வந்த ரஜினியை பார்க்கவும் ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். வாக்கை பதிவு செய்தபின் ரஜினி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். காலையிலேயே முன்னணி நடிகர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற முன்வந்து தங்களது வாக்கை பதிவு செய்து பலருக்கும் முன்னுதாரணமாக இருந்துள்ளனர்.
இந்த தேர்தலில் மொத்தம் 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப் போட இருக்கிறார்கள். வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்காக தமிழகம் முழுவதும் மொத்தம் 66 ஆயிரத்து 7 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளுக்கு நேற்றே 1 லட்சத்து 40 ஆயிரம் எந்திரங்களும், அதற்கு தேவையான 43 வகையான பொருட்களும், பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.
232 தொகுதிகளில் 3740 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 4 லட்சத்து 70 ஆயிரம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியை கவனித்து வருகின்றனர். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. முதியோர் மற்றும் ஊனமுற்றோர் வாக்குப்பதிவு செய்வதற்காக வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வீல் சேர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டுப்பதிவு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 164 பொதுப்பார்வையாளர்களும், 122 செலவினப் பார்வையாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறவும் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்குப்பதிவு செய்யவும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக 300 கம்பெனியைச் சேர்ந்த 18 ஆயிரம் துணை ராணுவப்படையினர் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பாதுகாப்பு வேலைகளை செய்து வருகின்றனர்.
இன்று அதிகாலை முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வாக்கு பதிவு சதவீதம் குறைந்து விடுமோ என்ற அச்சத்தில் வேட்பாளர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் உள்ளனர்.
-கே.பி.சுகுமார்.
படங்கள்: சி மகேந்திரன்.