ரிசர்வ் வங்கி அனுமதி பெற்றுதான், கோவை எஸ்.பி.ஐ வங்கியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு ரூ.570 கோடி பணம் எடுத்துச்செல்லப்பட்டது: சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி விளக்கம்!

CUURENCY CONTAINER IN TIRUPPUR.1CUURENCY CONTAINER IN TIRUPPUR1 CUURENCY CONTAINER IN TIRUPPUR

திருப்பூர் மாவட்டத்தில் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி, பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானது என்றும், ரிசர்வ் வங்கி அனுமதி பெற்றுதான், கோவை எஸ்.பி.ஐ வங்கியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு  ரூ.570 கோடி பணம் எடுத்துச்செல்லப்பட்டது என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரிகள், 3 கண்டெய்னர் லாரிகளையும், அவற்றுடன் வந்த 3 கார்களையும் மறித்து சோதனை செய்தனர். அந்த லாரிகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டறியப்பட்டது. 

இதுபற்றி காரில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அதில் இருந்த ரூ.570 கோடி, பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானது என்றும், விசாகப்பட்டினத்துக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.

இந்த பணத்திற்கு அசல் ஆவணங்கள் இல்லாததால், பணத்துடன் கூடிய கண்டெய்னர் லாரிகளை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்துக்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தி முடிவு எடுக்க ஐ.ஆர்.எஸ். அதிகாரி தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. விசாரணையில் அந்த பணம் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானதுதான் என்பது உறுதி செய்யப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, திருப்பூர் வருமான வரித்துறை துணை இயக்குனர், திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கடிதத்தில், பணம் வைத்துள்ள 3 கண்டெய்னர் லாரிகளையும், கோவையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலத்துக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்க சட்டப்படி உரிய ஏற்பாடு செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில், அந்த 3 கண்டெய்னர் லாரிகளும் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு பணம் எண்ணி சரிப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என்றும், அதுவரை தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும், அரசியல் கட்சிகளின் தூண்டுதலின் பேரில் டிராபிக் ராமசாமி மற்றும் சட்டபஞ்சாயத்து இயக்க தலைவர் சிவ.இளங்கோ ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

ரிசர் வங்கி அனுமதி பெற்றுதான், கோவை எஸ்.பி.ஐ வங்கியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு ரூ.570 கோடி பணம் எடுத்துச்செல்லப்பட்டதாகவும், இதற்கான அனுமதி கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதியே பெறப்பட்டுவிட்டதாகவும், ஏற்கனவே இது போன்ற பெருந்தொகை பரிமாற்றம் நடைபெற்றுள்ள நிலையில், தேர்தல் நேரம் என்பதால் இந்த விவகாரம் பெரிதுபடுத்தப்படுவதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கியின் சார்பில் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 -டாக்டர் துரைபெஞ்சமின்
ullatchithagaval@gmail.com