இலங்கை கடற்படை கைது செய்த 7 மீனவர்கள் மற்றும் இலங்கை வசம் உள்ள 89 படகுகளையும் தாமதமின்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம்!

pr230516cPRESS RELEASE

தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிக்கும்போது அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதை மீண்டும் தொடங்கியுள்ளனர். சமீபத்திய நிகழ்வாக, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்தவுடன் மீன்பிடிக்க சென்றபோது 31-05-2016 அன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு தலைமன்னார் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பாக் நீரிணையில் மீன்பிடிக்கும் நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமையை இலங்கை அரசு தொடர்ந்து மீறுகிறது.

மேலும், மீனவர்களின் படகுகளையும் மீன்பிடி சாதனங்களையும் விடுவிக்காத இலங்கை அரசின் போக்கு தமிழக மீனவர்களிடையே கடும் விரக்தியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, தாங்கள் இதனை இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று படகுகள் மேலும் சேதம் அடைவதற்குள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும். இலங்கை கடற்படை கைது செய்த 7 மீனவர்கள் மற்றும் இலங்கை வசம் உள்ள 89 படகுகளையும் தாமதமின்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கூறியுள்ளார்.

-ஆர்.அருண்கேசவன்.