எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமத் தலைவர் பாரிவேந்தர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வேந்தர் மூவிஸ் உரிமையாளர் மதன் மீது மாணவ, மாணவியர் புகார் மனு அளித்துள்ளனர். மருத்துவப் படிப்பில் இடம் கோரி ரூ. 60 லட்சம் அளித்துள்ளதாக சகுந்தலா என்ற மாணவி புகார் அளித்துள்ளார். மருத்துவப் படிப்பில் இடம் கேட்டு ரூ.1.25 கோடி கொடுத்துள்ளதாக மகேஷ் என்பவரும் மனு அளித்துள்ளார். மருத்துவப் படிப்பில் இடம் தராததால் பணத்தை திரும்பப் பெற்றுத்தருமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகர் பகுதியில் வசித்து வரும் எஸ்ஆர்எம் கல்வி குழும நிறுவனர் பாரிவேந்தர் வீட்டை நேற்று இரவு 25-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து வளசரவாக்கம் போலீசார் சம்பவ இடம் விரைந்து முற்றுகைகாரர்களிடம் சமாதானம் பேசினர். அவர்களிடம் பெற்றோர்கள், “எங்கள் பிள்ளைகளை எஸ்ஆர்எம் கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்க்க வேந்தர் மூவிஸ் மதனிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்தோம். ஆனால், அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல், மருத்துவ சீட்டையும் பெற்றுத்தராமல் கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகி விட்டார். நாங்கள் கொடுத்த பணம் குறித்து கேட்டால் எஸ்ஆர்எம் குழுமத்தினர் முறையான பதில் அளிக்க மறுக்கின்றனர். எனவே, எங்களது பணம் கிடைக்கும்வரை போராட்டத்தை கைவிடப்போவது இல்லை” என்று ஆவேசமாக கூறினர். இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-கே.பி.சுகுமார்.