எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவர் படிப்புக்கு வேந்தர் மூவீஸ் அதிபர் மதன் மூலம் மாணவர்களை சேர்ப்பதில் நடந்த முறைகேடுகள் குறித்தும், எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் பச்சமுத்து ரூ.20,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக குவித்து வைத்திருப்பது குறித்தும் சி.பி.ஐ.விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தியிருந்தார். அதற்கு பதிலளிப்பதாகக் கூறி அறிக்கை வெளியிட்ட பச்சமுத்து, மருத்துவர் அய்யா எழுப்பிய வினாக்களுக்கு பதிலளிக்காமல் அய்யா அவர்கள் மீது சேற்றை வாரி இறைத்துள்ளார்.
அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்வதற்காக யாரையாவது எதிரியாக சித்தரித்து அவர்களை எதிர்ப்பதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவது மருத்துவர் அய்யா அவர்களின் நோக்கம் என்று பச்சமுத்து கூறியிருப்பதை பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது. கொளுத்தும் வெயில் குறையும் நேரத்தில் நடந்து செல்பவர்களின் நிழல், அவர்களின் உண்மையான உயரத்தைவிட அதிகமாக இருக்கும். அதேபோல், வெயில் நேரத்தில் தனது நிழலைப் பார்த்துவிட்டு தாம் ஏதோ வளர்ந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு அவரை மருத்துவர் அய்யா அவர்கள் எதிர்ப்பதாக பச்சமுத்து உளறியிருக்கிறார்.
பச்சமுத்துவிடம் சட்ட விரோதமாக சேர்த்த பணத்தைத் தவிர வேறு எந்த தகுதியும் கிடையாது. அவரை எதிர்த்து அய்யா அவர்கள் அரசியல் செய்வதாகக் கூறுவது மனநிலை பிறழ்வுக்கு முந்தைய நிலை, கற்பனை தானே தவிர வேறொன்றுமல்ல. அதேபோல், அய்யா அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் பச்சமுத்து செய்த மோசடிகள் பற்றியது தானே தவிர, பச்சமுத்து என்ற தனி மனிதர் குறித்தவையல்ல.
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக 102 மாணவர்கள் பச்சமுத்துவின் பினாமியான மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். அவ்வாறு ஏமாந்த மாணவர்கள் சமூக நீதிக் காவலரான மருத்துவர் அய்யா அவர்களை சந்தித்து தங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பணத்தை இழந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தான் அய்யா அவர்கள் இந்த பிரச்சினையை கையில் எடுத்தார். அப்போது 40 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண ஆசிரியராக இருந்த பச்சமுத்துவுக்கு இப்போது ரூ.20,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்கள் குவிந்தது எப்படி? என்று வினா எழுப்பினார். அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இது மருத்துவர் அய்யா அவர்களின் வினா மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழகமும் எழுப்பும் வினா. தம் மீது எந்த தவறும் இல்லை என்பதில் பச்சமுத்து உறுதியாக இருந்தால் தன் நிலை குறித்து விளக்கம் அளித்திருக்கலாம் அல்லது இது குறித்த விசாரணையை சந்திக்க தயார் என்று அறிவித்திருக்கலாம்.
ஆனால், தம் மீதான குற்றச்சாற்றுகளுக்கு பதில் சொல்வதை விட்டு விட்டு, வன்னிய சமுதாயத்தையும், பார்க்கவகுல சமுதாயத்தையும் வம்புக்கு இழுத்திருக்கிறார். மருத்துவர் அய்யா அவர்கள் எழுப்பியது வன்னியர் பிரச்சினையும் அல்ல… பார்க்கவகுல சமுதாயத்தினர் பிரச்சினையும் அல்ல. மோசடி மன்னர்களை நம்பி மருத்துவப்படிப்புக்கு பணம் கொடுத்து ஏமாந்த மாணவர்களின் பிரச்சினை. மருத்துவப் படிப்புக்கு பணத்தை வாங்கி மோசடி செய்தது குறித்து பச்சமுத்து விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்பதால் எவரும் பொங்கி எழுந்துவிட மாட்டார்கள். மாறாக பாரி மன்னனின் வழி வந்த அம்மக்கள் உண்மைக்காக போராடுபவர்களுக்கு துணை தான் நிற்பார்கள். வன்னியர்களும், பார்க்கவகுல மக்களும் சகோதரர்களாகத் தான் பழகி வருகின்றனர்… இனியும் அவர்கள் அப்படித் தான் பழகுவார்கள். அது குறித்த கவலை பச்சமுத்துவுக்கு தேவையில்லை.
‘‘சமூக நீதிக்காக போராடுவதாகக் கூறும் ராமதாஸ் அவர்கள், பிற்படுத்தப்பட்ட ஒரு சமுதாயத்தின் தலைவரான என்னை தனிபட்ட முறையில் கொச்சைப்படுத்தி அறிக்கைகள் விடுவதும் பேட்டி கொடுப்பதும் எந்த விதத்தில் நியாயம்?’’ என்றும் பச்சமுத்து வினா எழுப்பியிருக்கிறார். சமூக நீதி என்றால் என்ன? என்பதற்கு எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் பச்சமுத்து விளக்கம் கேட்டுக் கற்றுக் கொள்வது நல்லது. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே பச்சமுத்து போன்றவர்களின் மோசடிக்கு துணை நிற்பது சமூக நீதியல்ல. இத்தகைய மோசடிகளை எதிர்ப்பது தான் சமூக நீதியாகும்.
மருத்துவர் அய்யா அவர்களின் சொத்து மதிப்பு குறித்தும், வன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்தும் பச்சமுத்து மனம் போன போக்கில் உளறியிருக்கிறார். அவை இரண்டுமே திறந்த புத்தகங்கள். வன்னியர் கல்வி அறக்கட்டளை என்பது உலகம் முழுவதும் உள்ள வன்னியர்களுக்கு சொந்தமானது. அதை தனி நபர்கள் எவரும் சொந்தமாக்கிக் கொள்ள முடியாது. பச்சமுத்து விரும்பினால் அவரை எனது மகிழுந்தில் ஏற்றிச் சென்று மருத்துவர் அய்யா அவர்களின் சொத்து விவரங்களையும், வன்னியர் கல்வி அறக்கட்டளை விவரங்களையும் காட்டத் தயாராக உள்ளேன் என்பதை அய்யா அவர்களின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதுகுறித்து எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக பேராசிரியர் குழுவைக் கொண்டு விசாரணை நடத்தினாலும் அதற்கு ஒத்துழைக்க பா.ம.க. தயாராக இருக்கிறது. அது குறித்த எந்த விசாரணைக்கு வேண்டுமானாலும் அய்யா அவர்கள் தயார். அதேபோல், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்ந்த சர்ச்சைகள் குறித்து விசாரணையை எதிர்கொள்வதற்கு பச்சமுத்து தயாரா?
மது போதையில் தள்ளாடும் ஒருவன் தனது தாயையும், மனைவியையும் பார்த்து எப்படி அவதூறாக வசைபாடுவானோ, அதேபோல் மதிப்பிற்குரிய பச்சமுத்து என்கிற பாரிவேந்தரும் மருத்துவர் அய்யா அவர்கள் குறித்தும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் குறித்தும் உண்மை கலப்படமற்ற புகார்களைக் கூறி தன்னை தரம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார். கடந்த காலங்களில் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மருத்துவர் அய்யாவின் கால்களில் மட்டுமின்றி, அவரது இல்ல பணியாளர்கள் கால்களிலும் விழுந்து வணங்கியும் தமது விதிமீறல்களுக்கு துணை நிற்கவில்லை என்பதாலும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் அனைத்து முறைகேடுகளையும் அம்பலப்படுத்தி விட்ட கோபத்திலும் தான் பச்சமுத்து இப்படி அவதூறுகளை அள்ளி வீசுகிறார் போலிருக்கிறது. இதை மருத்துவர் அய்யா அவர்கள் மன்னித்தாலும் என்னைப் போன்றவர்கள் மன்னிக்கத் தயாராக இல்லை.
மருத்துவர் அய்யா மீதும், அன்புமணி இராமதாஸ் மீதும் கூறிய அவதூறு புகார்களுக்காக பச்சமுத்து மீது பா.ம.க. தொண்டர்கள் அவதூறு வழக்குகளை தொடுப்பர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் எந்தத் தரப்பினர் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுப்பதும், போராட்டம் நடத்துவதும் மருத்துவர் அய்யா அவர்களின் வழக்கம். அதனால் அவர் சமூகப் போராளியாக மக்களால் பார்க்கப்படுகிறார். அந்த அடிப்படையில் தான் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப்படிப்புக்கு பணம் கட்டி ஏமாந்த மாணவர்களுக்காக குரல் கொடுத்தார். இப்போதும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மருத்துவப் படிப்புக்காக மாணவர்கள் பணம் கொடுத்து ஏமாந்தது உண்மை தான் என்பதை தமது அறிக்கையில் பச்சமுத்து ஒப்புக்கொண்டிருக்கிறார். அவ்வாறு வசூலிக்கப்பட்ட பணத்தை எடுத்துக் கொண்டு மதன் தலைமறைவாகிவிட்டார் என்பது தான் பச்சமுத்து அவரது அறிக்கையின் முதல் பத்தியில் சொல்ல வரும் விஷயம் ஆகும். பச்சமுத்துவின் வாதப்படியே வைத்துக் கொண்டாலும் அவர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளித்தாக வேண்டும்.
1. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் மற்றும் எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கி மதன் ஏமாற்றி விட்டார் என்றால் அவ்வாறு செய்வதற்காக அனுமதியை அவருக்கு தந்தது யார்? அதை பச்சமுத்து ஏன் தடுக்கவில்லை.
2. மருத்துவப்படிப்புக்கு மதன் பணம் வசூலித்து ஏமாற்றியது உண்மை எனும் போது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு இடங்கள் விலைக்கு விற்கப்பட்டன என்பது தானே உண்மை. அது சட்டவிரோதம் தானே. பச்சமுத்து படிப்படியாக பணக்காரர் ஆனது இப்படித் தானோ?
3. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்திலுள்ள மருத்துவப் படிப்பு இடங்கள் 8 ஆண்டுகளாக தம்மால் தான் நிரப்பப்பட்டதாக மதன் கடிதத்தில் கூறியிருப்பது உண்மையா… இல்லையா?
4. மதனுக்கும், எஸ்.ஆர்.எம். குழுமத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பச்சமுத்து கூறியுள்ளார். அப்படியானால் எஸ்.ஆர்.எம் குழுமத்தின் பணம் ரூ.200 கோடியை மதன் மோசடி செய்து விட்டதாக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டிருப்பது ஏன்? எஸ்.ஆர்.எம். குழுமத்துக்கு அந்த ரூ.200 கோடி பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க முடியுமா?
5. மதனுடன் தொடர்பு இல்லை என்றால், அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பட மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் மதனுடன் ஒன்றாக பச்சமுத்து கலந்து கொண்டது ஏன்?
6. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு அனைத்து மாணவர்களும் தகுதி மற்றும் திறமை அடிப்படையில் மட்டும் தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களா? ஒருவரிடமும் நன்கொடை வாங்காமல், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வாங்கி மாணவர்களை சேர்ப்பதாக பச்சமுத்துவால் கூற முடியுமா?
7. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் 2005 ஆம் ஆண்டு முதல் எந்த அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதற்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகளின் விடைத்தாட்கள், சேர்க்கப்பட்ட மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் உள்ளிட்டவற்றை வெளியிட பச்சமுத்து தயாரா?
8. 250 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக காட்டாங்கொளத்தூர் வளாகம் ஏரிகளையும், புறம்போக்கு நிலங்களையும் வளைத்து பட்டா வாங்கி கட்டப்பட்டது தானே? அதுகுறித்த விவரங்களை பொதுமக்களுக்கு வெளியிட்டு, விசாரணைக்கு உட்படுத்திக் கொள்ளத் தயாரா?
9. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏரியை ஆக்கிரமித்து எஸ்.ஆர்.எம். குழுமம் படகு சவாரி நடத்தி வருகிறது. அரசு சொத்தான ஏரியை ஆக்கிரமித்தது குற்றமில்லையா?
மேற்கண்ட எந்த வினாவுக்கும் பச்சமுத்துவால் பதிலளிக்க முடியாது. மதனுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறி முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க பச்சமுத்து முயல்கிறார். பச்சமுத்துவும், மதனும் எந்த அளவுக்கு நெருக்கம், இருவரும் இணைந்து திரைத்துறையில் அடித்த கூத்துக்கள் என்ன? என்பதற்கெல்லாம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரித்தால் தான் முழு உண்மையும் வெளிவரும் என்பதால் சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள் ஆணையிட வேண்டும். இப்பிரச்சினையில் பச்சமுத்து உள்ளிட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி ஓயாது.
இப்படிக்கு,
ஏ.கே. மூர்த்தி
துணைப் பொதுச்செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி.