திருச்சி ஜங்சன், கிராப்பட்டி செல்லும் சாலை அருகே, பல ஆண்டுகளாக மேம்பாலம் கட்டும் பணி தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று காலை 9.10 மணிக்கு மேம்பால கட்டும் பணிக்காக இரும்பு தூண் (Beam) ஒன்றை, க்ரெயின் இயந்திரத்தின் உதவியுடன் மேலே தூக்கி ஊழியர்கள் சரிசெய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஊழியர் ஒருவரின் காலில் இரும்பு தூண் (Beam) விழுந்தது.
தரையில் இருந்து சுமார் 15 அடி உயரத்தில் இருந்த அந்த ஊழியர், வலியால் துடித்துடித்து அங்கேயே மயங்கினார். அருகில் இருந்த சக ஊழியர்கள் அவரை அப்படியே தாங்கிப் பிடித்தனர். இதனால் அவர் உயிர் தப்பினார்.
அவ்வழியாக வாகனத்தில் அலுவலகம் வந்து கொண்டிருந்த நாம், உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து விட்டு, 15 அடி உயரத்தில், வலியால் துடித்துடித்து கொண்டிருந்த அந்த ஊழியரை உடனே கீழே கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்தோம்.
அச்சமயம் பாலம் கட்டும் பணிக்காக பயன்பட்டு வந்த டிப்பர் லாரியை வரவழைத்து, அங்கு இருந்த சக ஊழியர்கள் மற்றும் அருகில் பணியிலிருந்த போக்குவரத்து காவலர் உதவியுடன், டிப்பர் லாரியின் டிரைவர் சீட்டுக்கு மேல் பகுதியில் ஏறி, அடிப்பட்ட நபரை பத்திரமாக லாரியின் உட்பகுதிக்கு கொண்டு வந்து, லாரியை கொஞ்சம் தூரம் இயக்க சொல்லி, அதன் பிறகு நிழலான ஒரு பகுதியில் நிறுத்தி, 108 ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல், ஒரு தனியார் ஆட்டோவில் ஏற்றி அவசர சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, ஒரு மனித உயிரை காப்பாற்றிய மன நிம்மதியோடு எமது அலுவலகம் வந்து சேர்ந்தேன்.
மேம்பாலம் மற்றும் ஆபத்தான பணிகள் நடைப்பெறும் இடங்களில், இது போன்று விபத்தில் காயம் ஏற்படும் ஊழியர்களுக்கு முதலுதவி செய்வதற்கும், உடனடியாக அவர்களை உயர்சிகிச்சைக்கு காலதாமதமில்லாமல் கொண்டு செல்வதற்கும், மருத்துவர் குழு மற்றும் படுக்கை வசதியுடன் ஒரு நடமாடும் வாகனத்தை பணிகள் நடைப்பெறும் இடத்திலேயே நிரந்தரமாக ஈடுப்படுத்த வேண்டும். அப்போதுதான் உழைப்பாளிகளின் உயிர்களை உடனடியாக காப்பாற்ற முடியும்.
ஏனென்றால், நம்மை போன்ற நாட்டு மக்கள் அனைவரும் வசதியாக வாகனத்தில் பத்திரமாக பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக, தங்கள் உயிரையே பணையமாக வைத்து, அந்தரத்தில் தொங்கி மேம்பாலம் கட்டும் பணியில் இரவு, பகலாக ஈடுப்பட்டு வருகிறார்கள். என்னத்தான் அவர்கள் கூலிக்காக வேலைப்பார்த்தாலும், அவர்களின் தியாகத்தை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com