தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இன்று (14.06.2016) பிரதமர் நரேந்திர மோதியை சந்திக்க டெல்லி புறப்பட்டார். தனி விமானம் மூலம் டெல்லி சென்ற முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மதியம் 2.00 மணிக்கு டெல்லி போய் சேர்ந்தார். அங்கு அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்திலிருந்து டெல்லியில் உள்ள தமிழக இல்லத்திற்கு சென்றார்.
பின்னர், சுமார் 4.00 மணியளவில் டெல்லி, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் நரேந்திர மோதி வீட்டிற்கு சென்று, பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்திற்கு தேவையான 29 அம்ச கோரிக்கைகள் அடங்கிய 26 பக்க மனுவையும் பிரதமர் நரேந்திர மோதியிடம், தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வழங்கினார்.
அந்த மனுவில், ”தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நதி நீர் இணைப்பை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை சிறையில் உள்ள 21 தமிழக மீனவர்களையும், 92 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும். இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை மீட்க வேண்டும். கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோவிலை புதுப்பிக்க வேண்டும்.
நிலுவையில் உள்ள மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழஙக வேண்டும். பறக்கும் ரயிலையும், மெட்ரோ ரயிலையும் இணைக்க வேண்டும். ஜி.எஸ்.டி. மசோதாவில் அ.தி.மு.க கோரியுள்ள திருத்தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். கெயில் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்த வேண்டும்
மருத்துவ நுழைவுத் தேர்வை அமல்படுத்த மாநில அரசை கட்டாயப்படுத்தக் கூடாது. தமிழக அரசு பரிந்துரைத்துள்ள இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும். மாநில அரசுக்கு தரவேண்டிய நிதி உதவிகளை உடனே வழங்க வேண்டும். உணவு தானியங்கள் வழங்குவதை குறைக்கக் கூடாது. கூடங்களும் அணுமின் நிலைய 2வது அலகை உடனே தொடங்க வேண்டும். தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டும்” என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் இந்த அரசு முறை பயணத்தை அவரது அரசியல் எதிரிகளும், எதிர் கட்சிக்கு ஆதரவான அச்சு மற்றும் காட்சி ஊடகங்களும், அரசியல் கண்ணோட்டத்தோடு கடந்த ஒரு வாரக் காலமாக விமர்சித்து வந்தனர். அதற்காக கற்பனைக்கு எட்டாத வகையில் பல பொய் பிரசாரங்களை கட்டவிழ்த்து விட்டனர். தமிழ்நாடு கடனில் தத்தளிப்பதாகவும், அதற்காக ஜெ.ஜெயலலிதா மத்திய அரசிடம் மண்டியிட இருப்பதாகவும், அதனால் விரைவில் மத்திய அமைச்சரவையில் அஇஅதிமுக பங்கேற்க இருப்பதாகவும், ஒரு சில ஊடகங்கள் செய்திகளை கசிய விட்டன.
அத்தனை பொய் பிரசாரங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இது தமிழக நலனுக்கான ஒரு அரசு முறை பயணம்தான் என்பதை தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இன்று நிரூப்பித்துள்ளார்.
நிதி தேவைக்காக மத்திய அரசிடம் தமிழகம் ஒருபோதும் மண்டியிட தேவையில்லை என்பதை, தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களும், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை சேர்ந்த நண்பர்களும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் திட்டக்குழு, ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கும் பணியை முன்பு செய்து வந்தது. கடந்த காலங்களில், நிதி ஒதுக்குவதில் திட்டக்குழு பாரபட்சம் காட்டுவதாக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் குற்றம் சாட்டி வந்தன.
மத்தியில் ஆளும் கட்சிக்கு சாதகமாக உள்ள மாநிலங்களுக்கு கூடுதல் நிதியும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு குறைவான நிதியும் ஒதுக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது, நரேந்திர மோதி கூட, இந்த குற்றச்சாட்டை முன்வைத்து, விமர்சனம் செய்தார்.
இந்நிலையில், கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று, நரேந்திர மோதி பிரதமராக பதவி ஏற்றார். கடந்த 2014 சுதந்திரதின விழாவில், செங்கோட்டையில் கொடி ஏற்றி பேசிய அவர், மாநிலங்கள் வளர்ச்சி பெற்றால் மட்டுமே இந்தியா வளரும். எனவே, புதிய அரசு மாநிலங்களின் வளர்ச்சியில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் என்றார். மேலும், அவரின் இந்த முடிவுக்கு ஏதுவாக, திட்டக்கமிஷன் மாற்றி அமைக்கப்படும் என்று சுதந்திரதின விழாவிலேயே உறுதி அளித்தார்.
மாநிலங்களுக்கு கூடுதல் நிதி வழங்குவதற்கு வசதியாக, முதல் கட்டமாக திட்டக்குழுவை பிரதமர் நரேந்திர மோதி மாற்றியமைத்தார். “நிடி ஆயோக்” என்ற புதிய அமைப்பை உருவாக்கினார். இதில், ஒவ்வொரு மாநிலத்திற்கும், உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்கள் தங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை தயார் செய்து, இந்த அமைப்பின் மூலம் நிதி பெற்று, வளர்ச்சியை காண வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோதி அரசின் குறிக்கோள். புதிய அரசின் இந்த முடிவை, பா.ஜ.க, அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கூட ஏற்றுக் கொண்டுள்ளன. தமிழகமும் இந்த முடிவை வரவேற்றுள்ளது.
இந்நிலையில், 14-ம் நிதிக்குழு, மத்திய அரசுக்கு ஒரு அறிக்கையை, கடந்த 2014 -ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 15-ம் தேதி தாக்கல் செய்துள்ளது. அதில், மத்திய அரசின் வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியை 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என பரிந்துரை செய்தது. இது குறித்து பரிசீலனை செய்த மத்திய அரசு, நிதிக்குழுவின் இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ளது. மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்ற 14-வது நிதிக்குழுவின் பரிந்துரையை, நாங்கள் முழுமனதோடு ஏற்றுக் கொண்டுள்ளோம் என்று பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு, நிதிக்குழு பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ளதன் மூலம், நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மாநிலங்கள் அதில் இருந்து விடுபடும். மாநிலங்களின் வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள் உருவாகும். இதன் மூலம், பிரதமர் நரேந்திர மோதியின் மாநிலங்கள் வளர்ச்சியடைந்தால், நாடு வளர்ச்சியடையும் என்ற கூட்டாட்சி தத்துவத்திற்கு புதிய பரிமாணம் கிடைக்கும்.
எனவே, தமிழ்நாட்டின் நிதி தேவைக்காக ஜெ.ஜெயலலிதா மத்திய அரசிடம் மண்டியிட வேண்டிய அவசியமும் இல்லை. அதற்காக மத்திய அமைச்சரவையில் அஇஅதிமுக பங்கேற்க வேண்டிய அரசியல் நிர்பந்தமும் இல்லை. ஜெ.ஜெயலலிதா பதவிக்காக அலய கூடிய அரசியல் தலைவரும் அல்ல. ஏனென்றால், சிங்கத்தின் வாலாக இருப்பதைவிட, எறும்புக்கு தலையாக இருப்பதைதான் அவர் எப்போதும் விரும்புவார். அவருடைய 30 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையை உற்று நோக்கினாலே இந்த உண்மை தெரிய வரும்.
உரிமை என்பது கேட்டு பெறுவதல்ல, மாறாக எடுத்து கொள்வது என்ற இலக்கணத்திற்கு சொந்தக்காரர் ஜெ.ஜெயலலிதா.
மேலும், மக்களவையில் அதிமுகவுக்கு 37 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 13 உறுப்பினர்களும் உள்ளனர். நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்களின் பலம் 50 ஆக உயர்ந்து கூடுதல் செல்வாக்குடன் 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தும் அதிமுகவுக்கு கிடைத்துள்ளது. இதனால் ஆளும் பாஜகவுக்கு தான் அதிமுகவின் தயவு நிச்சயம் தேவைப்படும். ஆளும் பாஜக அரசு நாடாளுமன்றத்தின் மக்களவையில் கூடுதல் பலம் பெற்று ஆளுங்கட்சியாக இருந்தாலும், மாநிலங்களவை-ல் பா.ஜ.க-வுக்கு போதுமான உறுப்பினர்கள் பலம் இல்லை. எனவே, கடந்த காலங்களில் ஏதேனும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் கணிசமான எண்ணிக்கை கொண்ட காங்கிரஸின் தயவுக்காக காத்திருந்த சூழல் இருந்து வந்தது.
இந்நிலையில், தற்போது மாநிலங்களவையில் அதிமுகவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடியிருப்பதால், அதிமுகவின் ஆதரவு இல்லாமல், பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசு எளிதில் எந்த திட்டங்களையும் நிறைவேற்ற முடியாது.
மேலும், அடுத்த ஆண்டு நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு அதிமுகவின் ஆதரவு நிச்சயம் தேவைப்படும். எனவே, அதிமுகவை நம்பிதான் பாஜகவின் அரசியல் எதிர்காலம் இருக்கிறதே தவிர, அதிமுகவிற்கு எந்த அரசியல் நெருக்கடியும் இல்லை. எனவே, மத்திய அமைச்சரவையில் அதிமுக பங்கேற்க வேண்டிய அவசியமும் இல்லை.
மேலும், தன்னுடைய சுதந்திரத்தையும், சுயமரியாதையையும் அடமானம் வைத்து விட்டு, பதவி சுகத்திற்காக அடுத்தவர் தலைமையின் கீழ் ஜெ.ஜெயலலிதாவால் ஒரு நிமிடம் கூட பணியாற்ற முடியாது.
தன்னுடைய வார்த்தைகளுக்கும், உணர்வுகளுக்கும், மதிப்பளிக்காதவர்கள் யாராக இருந்தாலும், எத்தகைய இடமாக இருந்தாலும், அவர்களை ஜெ.ஜெயலலிதா துச்சமாக தூக்கியெறிந்து விடுவார். அது எம்.ஜி.யாராக இருந்தாலும் சரி, வாஜ்பாயாக இருந்தாலும் சரி, அதைப் பற்றியெல்லாம் அவர் ஒரு போதும் கவலைப்பட்டதில்லை.
பதவி சுகத்திற்காக ஜால்ரா போடுவதும், எடுத்த முடிவுகளில் சமரசம் செய்து கொள்வதும் ஜெ.ஜெயலலிதாவிற்கு பிடிக்காது ஒன்று.
சிறிய தேங்காய் சில்லுக்காக ஆசைப்பட்டு பொறியில் சிக்கி தன்னுடைய உயிரையே மாய்த்து கொள்ளும் எலி அல்ல ஜெ.ஜெயலலிதா. பசித்தாலும் புல்லை திங்காத புலி அவர். இதனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பெற்றதை விட, அவர் இழந்தது அதிகம்.
தனிப்பட்ட முறையில் யாரிடமும் எதையும் எதிர்பார்க்காத ஒரு விசித்திரமான மனிதர். கொடுத்து உறவாடுவதும், உறவாடி கெடுப்பதும் அவருக்கு அறவே பிடிக்காத ஒன்று.
ஆனால், அவருக்கு யாராவது நம்பிக்கை துரோகம் செய்தால், எப்பேர்பட்ட நபராக இருந்தாலும், ஏன் கடவுளின் அவதாரம் என்று சொல்லிக் கொள்ளும் நபர்களாக இருந்தாலும் கண்டிக்காமலும், தண்டிக்காமலும் விடமாட்டார்.
‘ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்’ என்ற பாடல் வரி தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவிற்கு மட்டும்தான் பொருந்தும்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com