பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம்.

jjpr170616_298

பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா எழுதிய கடிதத்தில்   கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் நடவடிக்கையின் மேலும் ஒரு சம்பவத்தை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

இலங்கை கடற்படையினரால் தமிழகத்தின் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 3 பேர் கடந்த 15-ந் தேதியன்று கைது செய்யப்பட்டு இலங்கையின் காங்கேசன்துறைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது.

தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை இலங்கை அதிகாரிகள் பிடிவாதமாக மறுத்து வருகின்றனர். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதற்கு இலங்கை, இந்தியாவுக்கு இடையே கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தம் தான் பிரச்சினைக்கு அடிப்படையாகும்

இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் தமிழகமும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது.

தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்படும் மீன்பிடி படகுகள், உபகரணங்களை திருப்பித்தராமல் காலம் தாழ்த்தும் இலங்கை அரசின் செயல் வேதனை அளிப்பதாக உள்ளது. படகுகள் நீண்ட காலம் உபயோகப்படுத்தப்படாமல் இருந்தால் அவை கெட்டு வீணாகிவிடும்.

எனவே, நமது மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனையில் நிரந்தர மற்றும் நடைமுறைக்கு சாத்தியமான தீர்வு காண மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், 15-ம் தேதி கைது செய்யப்பட்டிருக்கும் 3 மீனவர்கள் உட்பட இலங்கை சிறைகளில் உள்ள 24 மீனவர்களையும், பிடித்து வைக்கப்பட்டுள்ள 93 படகுகளையும் விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு உடனடியாக தாங்கள் உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com