சட்டசபையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மாநகராட்சிகள் தொடர்பான சட்டங்களை திருத்தம் செய்வதற்கான சட்ட முன் வடிவை தாக்கல் செய்தார்.
அதில் தற்போது மாநகராட்சிகளுக்கான தேர்தல் கட்சிகளின் அடிப்படையில் நடத்தப்படுகின்றன. சில மாநகராட்சிகளில் மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவ்வளவாக மாநகர மேயருக்கு இல்லாத காரணத்தால் மாமன்றங்கள் முறையாக செயல்படுவதில்லை என்று அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மாநகர மேயருக்கு கிடைக்கும் பட்சத்தில் மாமன்றம் சிறந்த முறையில் செயல்படும் என்று கருதப்பட்டது. அதன் காரணமாக மாமன்ற உறுப்பினர்களால் மறைமுகமாக மாநகர மேயரை தேர்ந்தெடுப்பது என்று அரசு முடிவு செய்து இருக்கிறது.
மேற்சொன்ன முடிவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் அரசு மாநகராட்சி தொடர்பான சட்டங்களை பொருந்தத்தக்க வகையில் திருத்தம் செய்வது என முடிவு செய்கிறது. இந்த சட்ட முன் வடிவு (மசோதா) மேற்சொன்ன முடிவுக்கு செயல் வடிவம் கொடுக்க விளைகிறது.
-ஆர்.அருண்கேசவன்.