பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இன்று எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
நாகை மாவட்டம், விழுந்தமாவடியில் இருந்து கடந்த 21-06-2016 அன்று எந்திர படகில் மீன் பிடிக்க சென்ற 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் 23-06-2016 அன்று சிறை பிடித்து சென்று விட்டது பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டு வர இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
5 மீனவர்களும் சென்ற படகு, என்ஜினில் பழுதானது காரணமாக திசை மாறி சென்று இலங்கை வல்வெட்டி துறையில் கரை ஒதுங்கி உள்ளது. அவர்களை இலங்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடுக்கடலில் தத்தளித்தவர்கள் மீது இலங்கை மனிதாபிமான மற்ற முறையில் நடந்து கொண்டதையே இது காட்டுகிறது.
இலங்கை சிறைகளில் ஏற்கனவே 24 தமிழக மீனவர்கள் உள்ளனர். தமிழக மீனவர்களின் 93 படகுகளையும் இலங்கை வைத்துள்ளது. தமிழக மீனவர்களின் படகுகளை மட்டும் திருப்பி தராமல் தந்திரமாக நடந்து கொள்வதால், தமிழக மீனவர்கள் மிகுந்த மன வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகி இருக்கிறார்கள். எனவே, தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் தொடர்ந்து மீன் பிடிக்க 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை தமிழக அரசு வலியுறுத்துகிறது.
இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை எதிர்த்து நான் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு (W.P. Civil No.561/2008) நிலுவையில் உள்ளது. எனவே, தாங்கள் இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு இலங்கை சிறைகளில் உள்ள 29 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளியுறவு துறைக்கு உத்தரவிட்டு மீனவர்களை மீட்பதோடு, அவர்களது 94 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com