வாத நோய்களும் அதற்கான மருந்துகளும் ஆயுர்வேத மருத்துவத்தின் அற்புதங்கள்…!

 

  • வாயுவானது உந்தியாகிய தொப்புளிலிருந்து உண்டாகி      சிரசில் முட்டிப் பின்னர் தேகத்தில் சஞ்சரிக்கும். இதை தான் பிராணவாயு என்கின்றோம்.
  • வயிற்றில் இருந்துக் கொண்டு சிறுநீர்(மூத்திரம்), மலம் இவைகளை வெளித்தள்ளும் இயல்பு உடையது அபானவாயுவாகும்.
  • ஆகார ரஸத்தை  நாடிகளின் மூலம் தேகமெங்கும் வியாபிக்கச் செய்வது வியானவாயுவாகும்.
  • ஆகாரத்தைச் சீரணம் செய்வது உதானவாயுவாகும். இதர வாயுக்களையெல்லாம் சமநிலையாக்குவதை  சமானவாயு ஆகும்.
  • விக்கல், வாந்தி செய்தல் முதலான செயல்களைச் செய்வது நாகன் என்ற வாயுவாகும். கூர்மன் என்ற வாயு கண்களில் நின்று இமைத்தலைச் செய்கிறது.
  • சிரிப்பு, கொட்டாவி இவைகளைச் கிரிகரன் என்ற வாயு உண்டாக்குகிறது.
  • கோபத்தை ஏற்படுத்துவது தேவதத்தன் என்ற வாயுவாகும்.
  • தனஞ்சயன் என்று சொல்லப்படும் வாயு மண்டையுச்சியில் தங்கி நின்று சாகுங்(மரண)காலத்தில் தேகத்திலுள்ள வாயுக்கள் சென்ற பின்னரும் உடலில்    1/3(முக்கால்)  சாமம் சூஷ்மமாக இருந்து வியர்வை, வீக்கம் இவைகளை உண்டாக்கிப் பின்னர் கபாலத்தின் வழியாக வெளியேறும்.

இடை என்ற நாடியானது வலதுகால் பெருவிரலில் ஆரம்பித்து இடது நாசியில் முடியும். பிங்கலை என்ற நாடியானது வலதுகால் கட்டைவிரலில் ஆரம்பித்து இடது நாசிப்புழையின் நுனியில் நிற்கும். சுழுமுனை என்ற நாடியானது மூலாதாரத்தில் ஆரம்பித்து, சிரஸ் வரையில் நிற்கும். கிங்குவை நாடியானது நாக்கில் இருந்துக் கொண்டு ரஸத்தை அறிய வைக்கும். புருடன் என்ற நாடியானது கண்களில் நிற்கும். அலம்புஷா என்ற நாடியானது காதுகளில் இருக்கும். சங்கினி என்ற நாடியானது ஆண், பெண் குறிகளில் நிற்கும். குதம் என்ற நாடி அபானத்தளவிலே நிற்கும். காந்தாரி என்ற நாடி இடது கண்ணிலும், அஸ்திபிங்கு என்ற நாடி  வலது காதிலும் நிற்கும்.

வாத நோய்கள் 80 வகைப்படும்:-

 1.பக்வாசய வாதம்
2.ஆமாசய வாதம்
3. உதிர வாதம்
4. மாங்கிஷ வாதம்
5.மேதஸ் வாதம்
6.அஸ்தி வாதம்
7.மஜ்ஜை வாதம்
8.சுக்கில வாதம்
9.ஸந்திகத வாதம்
10.ஆஷேபக வாதம்
11.அபதந்திரிக வாதம்
12.அந்திராயாம வாதம்
13.பாஹ்யாயாம வாதம்
14.பிராணாயாம வாதம்
15.அனுசிராங்க வாதம்
16.சீவுகத்தம்ம வாதம்
17.அர்தித வாதம்
18.சிரோக்ரஹ வாதம்
19.பசஷ வாதம்
20.சர்வாங்க வாதம்
21.தண்டக வாதம்
22.அபபாஹீக வாதம்
23.விச்வபி வாதம்
24.கஞ்ச வாதம்
25.பங்கு வாதம்
26.கலாயகஞ்ச வாதம்
27.ஊருக்கம்ப வாதம்
28.ஆட்டிய வாதம்
29.கொட்டுச்சீ  வாதம்
30.வாதகண்டக வாதம்
31.க்ருத்ரஸீ வாதம்
32.பாதார்ச வாதம்
33.பாததாக வாதம்
34.சுரதாக வாதம்
35.கரபாததாக வாதம்
36.அர்த்தாங்கதாக வாதம்
37.ஏகாங்கதாக வாதம்
38.சித்திராங்கதாக வாதம்
39.சுரோணித வாதம்
40.வாதசோணித வாதம்
41.பித்தசோணித வாதம்
42.சிலேற்பனச்சோணித வாதம்
43.பிராண வாதம்
44.உதான வாதம்
45.வியான வாதம்
46.சமான வாதம்47.அபான வாதம்
48.சாம வாதம்
49.நிராம வாதம்
50.பித்தாவரண வாதம்
51.வாதாவரண வாதம்
52.சிலேத்மாவரண வாதம்
53.இரத்தாவரண வாதம்
54.மாம்ஸாவரண வாதம்
55.மேதாவரண வாதம்
56.அஸ்த்யாவரண வாதம்
57.மஜ்ஜாவரண வாதம்
58.சுக்லாவரண வாதம்
59.அன்னாவரண வாதம்
60.மூத்ராவரண வாதம்
61.மலாவரண வாதம்
62.சர்வாதாவரண வாதம்
63.பிராணபித்தாவரண வாதம்
64.உதானபித்தாவரண வாதம்
65.வியானபித்தாவரணவாதம்
66.சமானபித்தாவரண வாதம்
67.அபானபித்தாவரண வாதம்
68.கரபித்தாவரண வாதம்
69.உதானாவரண வாதம்
70.வியானாவரண வாதம்
71.சமானாவரண வாதம்
72.சிலேற்பணாவரண வாதம்
73.பிராணவதானாவரண வாதம்
74.ஆமாவரண வாதம்
75.அனலெரி வாதம்
76.விரண வாதம்
77.சுடக்கு வாதம்
78.அண்ட வாதம்
79.குடல் வாதம்
80.கழல் வாதம்.

வாத நோய்களின் பிரச்சனைகள்:-

வயிறு மந்தமாகும், மலச்சிக்கல் உண்டாகும், மூட்டுகள், கால்கள் முதலான இடங்களில் வலி உண்டாகும், தாது நஷ்டமாகும், நகம் பிளத்தல், பாதம், உள்ளங்கை வெடித்தல், பாதத்தில் குத்து வலி, பாதத் தடுமாற்றம், பாதம் மறத்துப் போதல், கணுக்கால் வளைவு, கணுக்கால் பிடிப்பது போன்ற வலி, முழங்கால் மூட்டு நழுவுதல், துடை ஸ்தம்பித்தல், துடைவிலவிலத்தல், ஆசனம் வெளிப்படுதல், ஆஸனக்கடுப்பு, விரைமேல் இழுத்துக் கொள்ளல், குறி அசையாமை, துடையிடுக்கில் வாயு சேர்ந்து வலி, பின் பாதத்தில் பிளப்பது போன்ற வலி, வாதம் தம் ஸ்தனமாகிய பக்குவா சயத்திலிருந்து மேல் நோக்கி கிளம்புதல், தாங்கி தாங்கி நடத்தல், குறுகிய உருவம், முள்ளந்தண்டின் அடிபாகத்தில் பிடிப்பு, முதுகுப் பிடிப்பு, விலாப் பிடிப்பு வலி, வயிற்றைச் சுருட்டல்,  வாத பைத்தியம், இருதயம் வேகமாக  அடித்துக் கொள்ளுதல், இருதயத்தைத் தேய்ப்பது போன்ற வலி, மார்பு அடைப்பு, மார்பில் குத்து வலி, கையுலர்ந்து போதல், கழுத்து திருப்ப முடியாதிருத்தல், கழுத்தின் சிரைஸ்தம்பம், சிந்தனா சக்தி குறைதல், கழுத்தைப் பிளப்பது போன்ற வலி, தாடையில் பிளப்பது போன்ற வலி, உதட்டில் பிளப்பது போன்ற வலி, கண்ணில் பிளப்பது போன்ற வலி, பல்லில் பிளப்பது போன்ற வலி, பல் அசைதல், தழ தழத்துப் பேசுதல், வாய் உலர்தல் ருசியறியும் சக்தியை இழத்தல், காதில் குத்து வலி, காது இரைச்சல், உரத்தச் சத்தம் மாத்திரம் காதில் விழுதல், இமை அசையாதிருத்தல், கண் மறைப்பு, கண்ணில் குத்து வலி, கண் பிதுங்கல், பொட்டில் பிளப்பது போன்ற வலி, புருவம் உயர்தல், நெற்றியில் பிளப்பது போன்ற வலி, தலைவலி, மண்டைத்தோல் வெடிப்பு, முகம், கை, கால்களில் வலி, ஒரு பக்கம் வலி, வாய் கோணும் படி செய்தல், வலது அல்லது இடது பக்கம்  ஒன்றில் மாத்திரம் வலி, வலது, இடது இரண்டு பக்கத்திலும் வலி, கம்பு போல் உடம்பு முழுவதும் விரைத்தல், களைத்துப் போதல், மயக்கம், நடுக்கம், கொட்டாவி, விக்கல், உற்சாகமின்மை, பிதற்றல், அயர்வு, வறட்சி, உடம்பில் சொர சொராப்பு,  சரீரம் மலம் முதலின கருமை கலந்த நிறமாகுதல், தூக்கமின்மை, மனம் ஓரிடம் தரிக்காமல் இருத்தல் ஆகிய அறி குறிகள், தொந்தரவுகள், வேதனைகள் வாத நோய்களில் உண்டாகும் என்று ஆயுர்வேத மருத்துவம் தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்றது.

வாத நோய்கள் வருவதற்கான காரணங்கள்:-

துவர்ப்பான பதார்த்தங்களை அதிகமாகச் சாப்பிடுவதாலும், வறட்சி, குளிர்ச்சி இவைகள் உள்ள அன்னபான பழக்க வழக்கங்களை அதிகமாகக் கையாளுவதாலும், அதிகமான பெண்களிடம் உடல் உறவு கொண்டு சக்தியை இழப்பதாலும், அதிகமான கண் விழிப்பினாலும், ஆகாரக் குறைவினாலும், இலகுவான ஆகாரத்தையே சாப்பிடுவதாலும், பசியை அடக்குவதாலும், உடலில் இருந்து அதிகமான இரத்த இழப்பு ஏற்படுவதாலும், கவலை, துக்கம், நோய், அதிக இளைப்பு, இவைகளினால் ஏற்படும் தாது புஷடிக் குறைவதாலும், மலம், சிறுநீர் வரும் போது கழிக்காமல் அவற்றின் வேகங்களை அடக்குவதாலும், ஜீரணமாகாத ரஸம், ஆம விஷமாக மாறுவதாலும், தாண்டுதல், ஒடுதல், நடத்தல், கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் தன் வலுவுக்கு மிஞ்சிய காரியங்களை செய்வதாலும், வேகமாக செல்லும் வாகனங்களிலிருந்து விழுவதாலும், அடிப்படுவதாலும், உயிர் நிலைகளுக்குக் கெடுதி ஏற்படுவதாலும், உடம்பிலுள்ள ஸ்ரோதஸ் (DUCTS)என்னும் திரவ மார்க்கங்களில் இருக்க வேண்டிய பொருட் செறிவு குறைந்து அதை நிரப்புவதற்காக, உடல் முழுவதும் சங்சாரம் செய்யும் சக்தி வாய்ந்த வாயு புகுந்து கொள்கிறது. அப்படி புகுந்துக் கொண்டு ஓர் உறுப்பையோ அல்லது பல உறுப்புகளையோ அடைந்து பலவிதத் தொந்தரவுகளைச் செய்கிறது. இதை தான் வாத ரோகம் என்று ஆயர்வேத மருத்துவம் கூறுகின்றது.

மரத்துப்போதல், தளர்ச்சி, உடலில் ஒரு பகுதி தன் வசமிழத்தல், ஒரு பக்கத்தில் ஏதாவது தளர்வோ, தொய்வோ ஏற்படுகிறது என்றால் உடனே கவனிக்க வேண்டும். பிரச்சனை கிட்டதட்ட திடீரென ஏற்பட்டதாக இருந்தால் தலையில் அடிப்பட்டு இருக்கலாம் அல்லது பாரிச வாயுவாகவோ, பெல் முடக்கு வாதமாகவோ இருக்கக் கூடும். இது படிப்படியாக வந்திருந்தால் மூளைக்கழலையாக இருக்கலாம். இயல்பான கண் அசைவுகள், கண் மணிகளினின்  அளவு, பார்வைதிறன் ஆகியவற்றை உடனே பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.

  • தசை மெலிவு, கால் அல்லது கை பருமனில் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருந்தால், தசை மெலிவு, தளர்வு உடல் முழுவதையும் பாதித்திருந்தால் ஊட்டக்குறையாகவோ அல்லது காசநோய் போன்ற நாள்பட்ட நோயாகவோ இருக்கலாம். தசை மெலிவு, தளர்வு ஒரே சீராக இல்லாமலிருந்தால் அல்லது ஒரு பக்கம் மோசமாக இருந்தால் குழந்தைகள் விசியத்தில் இளம்பிள்ளை வாதமாகவும், வயது வந்தவர்கள் விசியத்தில் முதுகு சம்பந்தமானப்  பிரச்சனைகள், முதுகு அல்லது தலையில் காயம், பாரிச வாயு போன்றவற்றில் ஒன்றாக இருக்கக் கூடும்.

  • முதுகு வலிக்கு  பல காரணங்கள் இருக்கின்றன. நாள்பட்ட இருமலுடன் எடைக்குறைவும் ஏற்பட்டு, கடுமையான மேல் முதுகு வலியும் இருந்தால் நுரையீரல் காசநோயாக இருக்கலாம்.

  • குழந்தைகளுக்கு நடு முதுகில் வலி ஏற்பட்டால், குறிப்பாக முதுகெலும்புக் கூன் அல்லது புடைத்திருந்தால் , முதுகெலும்புக் காசநோயாக இருக்கலாம்.

  • கனமான பொருட்களைத் தூக்கிய பிறகு, கடினமான வேலைகளை செய்த பிறகு அடி முதுகில் வலி ஏற்பட்டால் சுளுக்காக இருக்கலாம்.

  • ஏதாவது ஒன்றைத் தூக்கும்போது அல்லது திரும்பும் போது முதல் முறையாக அடி முதுகில் வலி ஏற்பட்டால் குறிப்பாக, ஒரு பாதத்திலோ, காலிலோ வலி ஏற்பட்டால் அல்லது மரத்துப்போய் அது வலுவிழந்தால் முதுகெலும்பு பிறழ்வாக இருக்கலாம். இது நரம்பு நசுங்குவதால் ஏற்படக்கூடும்.

  • மேல் முதுகில் அல்லது வலது கை பக்கம் வலி ஏற்ப்பட்டால் பித்தப்பைக் கோளாறாக இருக்கலாம்.

  • சில பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அல்லது காப்ப காலத்தில் அடி முதுகில் வலி ஏற்படுவது சகஜம். இதற்காக கவலைப்பட தேவையில்லை.

  • சில சமயங்களில் கர்பப்பை, சினைப்பைகள் அல்லது மலக்குடல் ஆகியவற்றில் ஏற்படும் தொந்தரவு காரணமாக முதுகின் கீழ் பகுதியில் வலி ஏற்படக்கூடும்.

  • சிறுநீர் மண்டலம் பிரச்சனையாக இருந்தாலும் முதுகில் திடீரென வலியோ அல்லது நாள்பட்ட வலியோ இருக்கக் கூடும்.

  • சரியாக உட்காராமல் தோள்கள் தொங்கும் படியாக உட்காருவதும், நிற்பதும் முதுகுவலி ஏற்படப் பொதுவான காரணங்களாகும்.

  • முதியவர்களுக்கு நாள்பட்ட முதுகு வலி பெரும்பாலும் மூட்டு வலியால் தான் ஏற்படும்.

வாத நோய்களுக்கான மருந்துகள் விபரம்:-

சுத்தி செய்த சிவதை வேர்-105 கிராம், கொடிவேலிவேர்- 35 கிராம், சிற்றாம்முட்டி, சங்கம் வேர், பிரண்டை வேர், புங்கம்வேர், வெள்ளை சாரணைவேர், நில வேம்பு, நிலபனங்கிழங்கு இவைகளை வகைக்கு 17 கிராம் எடுத்துக் கொண்டு நிழலில் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து கொள்ளவும்.

திப்பிலி, செவ்வியம், யானைத்திப்பிலி, நெல்லிவற்றல், வசம்பு, சுக்கு, மிளகு, கொத்தமல்லி விதை, வாயுவிடங்கம், கற்கடசிங்கி, கடுக்காய் தோல், தான்றித் தோல், பூண்டு, காட்டு மிளகு, ஓமம், சீரகம், சிறுதேக்கு, ஆயில்யமரப் பட்டை, மஞ்சள், வெங்காரம், குராசானி ஓமம், கோஷ்டம், கிராம்பு, வளையலுப்பு, சத்திச் சாரம், கல்லுப்பு, பேரீச்சங்காய், சித்தரத்தை எவச்சாரம், கருஞ் சீரகம், அதிவிடம், மஞ்சள், இந்துப்பு, ஏலக்காய், திராட்சை, சிறு நாகப்பூ, காட்டத்திப்பூ, பூனைக்கண் குங்குலியம், சுத்தி செய்த நேர்வாளம் இவைகளை வகைக்கு 35 கிராம் வீதம் எடுத்துக் கொள்ளவும்.

அதனோடு, கடுகரோகினி-105 கிராம், சுத்தி செய்த குக்குளு-525 கிராம், சுத்தி செய்த கெந்தகம்-280 கிராம், சுவர்ண பற்பம்- 12 குன்றி நிறை, லிங்கச் செந்தூரம்- 12 குன்றி நிறை, ரசபற்பம்- 12 குன்றி நிறை, லோக பற்பம்-16 குன்றி நிறை, சுவர்ணமாஷிக கற்பம்- 14 குன்றி நிறை, வெள்ளி பற்பம்-6 குன்றி நிறை, கிருஷ்ணாப்பிரகம் -70 கிராம், வெள்ளை அப்பிரகம் – 70 கிராம் ஆகிய இச்சரக்குகளை சேர்த்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு இடித்து வஸ்திரகாயஞ் செய்யவும். பிறகு இதை ஒரு பட்டாணி அளவு மாத்திரையாக தயார் செய்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

இதை 90 நாட்களுக்கு காலை, மாலை  ஒரு மாத்திரை வீதம் தேனில் சாப்பிட்டு வந்தால் கழுத்து வலி, தோள்பட்டை வலி, முழங்கை வலி, மணிக்கட்டு வலி, முதுகு வலி, முழங்கால் வலி, குதிங்கால வலி, தசைப் பிடிப்பு, சோகை, பிரமேகம், விரணங்கள், புண் மற்றும் அனைத்து விதமான தசை, நரம்பு, எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான பிரச்சனைகளும், 80 வகையான வாத நோய்களும் பூரணமாக குணமாகும்.

80 வகையான வாத நோய்களுக்கும் தைலம்:- (வெளிப்புற உபயோகம் மட்டும்)
தழுதாழை, நொச்சியிலை, புங்க இலை, சாறணை, ஊமத்தை, கழற்சிக்கொடி, சதுரக் கள்ளி, வேலிப் பருத்தி, ஆடாதோடை, முதியார் கூந்தல், தைவேளை, சிவனார் வேம்பு, இவைகளின் சாறுகளில் வகைக்கு 250 மில்லி எடுத்துக் கொண்டு, கொடிவேலி, சாரணை வேர், பூணை வேர், வெள்ளைப் பிசின், மாவிலங்கை வேர், பாவட்டை வேர், புங்க வேர், தில்லை வேர், வில்வ வேர், சிறு குறிஞ்சா வேர், இலுப்பைப் பட்டை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து 12 லிட்டர் தண்ணீர் விட்டு அதை 3 லிட்டர் வரும் வரை நன்றாக காச்சி வடிகட்டி கொள்ளவும். இறுத்துக் கொண்ட கஷாயத்துடன் முன் சொன்ன சாறு வகைகளையும் சேர்த்து, அதில் சுத்தி செய்த நேர்வாளம், பெருங்காயம், கல்மதம், வெடியுப்பு இவைகளை வகைக்கு 2 கலஞ்சு வீதம் எடுத்துப் பொடி செய்து போட்டு அதனோடு நல்லெண்ணெய், புங்க எண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பையெண்ணெய், தேங்காய்பால் வகைக்கு 1 லிட்டர் வீதம் விட்டுக் குங்கிலியத்தூள் சேர்த்து 3 நாள் எரித்துப் பதத்தில் இறுத்து தினமும் உடம்பில் பூசி வர 80 வகையான வாதமும் நிச்சயமாக தீரும்.

பத்தியம்: மருந்து உட்கொள்ளும் காலங்களில் உடல் உறவை தவிர்க்க வேண்டும். குளிர்ந்த நீர், பனி, மழை, குளிர், காற்று இவற்றில் பிரவேசிக்கக் கூடாது. அகத்திக்கீரை, சிறுகீரை, பாகற்காய், தயிர், தட்டை, மொச்சை, முற்றிய வாழைக்காய், கொத்தவரங்காய், கசப்பு, துவர்ப்பு உணவு பதார்த்தங்களையும், எண்ணெய் பலகாரங்களையும் சாப்பிடக் கூடாது.
பால், நெய், தேன், வெள்ளைப்பூண்டு, மிளகு, முருங்கை பிஞ்சு ஆகியவற்றை உணவில் அதிக அளவில் சேர்த்து கொள்வது நல்லது. பகல் தூக்கம் கூடாது. கடுமையான சுமை தூக்குவதோ, கடுமையான உடற் பயிற்சிகள் செய்வதோ கூடாது. மேலும் விபரங்களுக்கு ஆயுர்வேத மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளவும்.