இந்திய மருத்துவத்தின் சிறப்புகள்

 

அறிவியல், கலாச்சாரம், இலக்கியம், மருத்துவம், வான சாஸ்திரம் என அனைத்துத் துறைகளிலும் தலைச்சிறந்து விளங்கியவர்கள் கிரேக்கர்கள், 2600 ஆண்டுகளுக்கு முன்னதாகவே சூரியகிரகணம் என்று ஒன்று நிகழப்போவதை முதன் முதலில் கண்டறிந்த பெருமை கிரேக்க நாட்டு வான சாஸ்திர வல்லுனர்களுக்கே உண்டு. இப்படி பலத்துறைகளிலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த கிரேக்கர்களின் அறிவுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் அடிப்படையாக இருந்தவர்கள் நமது இந்தியர்கள்தான் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

உலகத்திலுள்ள எல்லா மருத்துவ நூல்களைவிட மிகமிக சிறந்தது நமது இந்திய மருத்துவ நூல்கள் தான்! நமது இந்திய மருத்துவ நூல்களிலிருந்துதான் ஆங்கில மருத்துவம் பிறந்ததாக சரித்திரச் சான்று உணர்த்துகிறது.

கிரேக்க தேசத்திற்கும் இந்தியாவிற்குமிடையே பல ஆண்டுகள் வியாபாரத் தொடர்புகள் இருந்து வந்தது. ஆகவே இந்தியர்களுடைய வைத்திய முறைகள் கிரேக்கத் தேசத்தாருக்கு எட்டியிருக்க கூடுமென்பது உண்மை தான் என்று கிரேக்கத் தேசத்தைச் சேர்ந்த வல்லுனர்கள் வீபர் என்பவரும் பக் (WEBER AND BUCK) என்பவரும் தங்கள் நூல்களில் விளக்கமாக விவரித்துள்ளார்கள்.

மேலும் நம் இந்தியாவின் மீது படையெடுத்த அந்நிய தேசத்தார் அனைவரும் நமது நாட்டின் வளங்களை மட்டும் கொள்ளையடித்து செல்லவில்லை. அரிய கலைகளையும், மருத்துவ ஆராய்ச்சிகளையும் அதோடு சேர்த்து மருத்துவ வல்லுனர்களையும், பணைய கைதிகளாக அழைத்து சென்று அவர்களிடமிருந்து அனைத்து ரகசியங்களையும் கற்றுத் தேர்ந்துள்ளார்கள் என்பதுதான் அடிப்படை உண்மை, இப்படி உலகுக்கே உதாரணமாக விளங்கிய இந்தியர்களின் மருத்துவம் சித்தா, ஆயுர்வேதா, யூனானி போன்றவையாகும்.

  • B.S.M.S(Bachelor of siddha medicine-and Surgery)

  • B.A.M.S(Bachelor of Ayurvedic- Medicine and Surgery) 

  • B.U.M.S (Bachelor of Unnani medicine and Surgery)

என்று இந்திய முறை மருத்துவ கல்வியை நமது அரசு முறையான பாடத்திட்டங்களை வகுத்து 5 ½ ஆண்டு பட்டப்படிப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில் அனுபவ மற்றும் பரம்பரை மருத்துவர்களை முறையாக பதிவு செய்து வரையறைப்படுத்தியும் இருக்கின்றது. இந்திய மருத்துவ முறை பட்டதாரி மருத்துவர்களை உருவாக்குவதற்கும், அதற்கான மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கும், அதற்கான பாடதிட்டங்களை வகுப்பதற்கும்,  அடிப்படையாக  இருந்தவர்கள் பரம்பரை மருத்துவர்கள்தான் என்பது குறிப்பிடத் தக்கது. இன்னும் கூட பதிவு பெறாத சித்த ஆயுர்வேத பரம்பரை மருத்துவர்கள் ஏராளமானோர் நம் இந்தியாவில் இருக்கிறார்கள். இவர்களை நாம் குறைத்து மதிப்பிட முடியாது, ஏனென்றால் ஆங்கில மருத்துவத்தால் கைவிடப்பட்ட பல நாள்பட்ட நோய்களை தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் உடனுக்குடன் மருந்துகளை தயார் செய்து குணப்படுத்தி வருவது ஆச்சர்யமாக இருக்கிறது. சரீரத்தில் மரணம் அணுகாத வண்ணம் இகலோக, பரலோக சுகங்களை அனுபவிக்க எண்ணி காயகல்ப மருந்துகளை தயார் செய்து பல ஆயிரம் ஆண்டுகள் ஜுவித்து வாழ்ந்தவர்கள் தான் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் மனோ சக்தியால் பல அபூர்வ வித்தைகளையும், சாதனைகளையும் செய்து வந்தார்கள். அவர்கள் நினைத்த நேரத்தில் தங்கள் பொருட்டு சித்தியின் மூலமாக பல இடங்களுக்கும், மனோவேகத்தில் சென்று வருவார்கள். எளிய முறையில் அனுபவித்து காரிய சித்தி பெற்றவர்களே சித்தர்களாவர்கள்.

அவர்கள் உருவாக்கியது தான் சித்த மருத்துவமாகும். அகஸ்தியர், திருமூலர், இராம தேவர், இடைக்காட்டார், தன்வந்திரி, வால்மீகி, கமலமுனி, போகர், மச்சமுனி, கொங்கணர், பதஞ்ஜலி, நந்தி தேவர், சட்டமுனி, சுந்தராநந்தர், பாம்பாட்டியீசர் குதம்பை சித்தர், கருவூரர், கோரக்கர் என்று 18 சித்தர்களின் பெயர்கள் அழைக்கப்படுகின்றனர்.

இவர்களில் போகர், புலிப்பாணி, இராமதேவர் ஆகியோர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் தமிழ் சித்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் சித்த வைத்தியம் தமிழ்நாட்டுக்கே உரிய உயர்ந்த மருத்துவம் என்பதை யாரும் மறுக்க முடியாது. சித்தா, ஆயுர்வேதா, யூனானி ஆகிய மூன்றும் நம் இந்திய மருத்துவ முறைகளாக இருந்தாலும் ஆரியர்களின் மருத்துவமான ஆயுர்வேதம் வடமொழிக்கும், யூனானி மருத்துவம் உருது மொழிக்கும் உரியதாக விளங்குகிறது. இந்த மூன்று வகையான மருத்துவ முறைகளும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு உடையதாக இருப்பதால் இவைகளை ஒரே வயற்றில் பிறந்த குழந்தைகள் என்றே கூறலாம்.

பஞ்சபூத தத்துவங்களான பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வாதம், பித்தம், கபம் என்ற திரிதோஷ கொள்கைகளை நோய் அறியும் வழியாக கொண்டு மனித இனத்தை மரணப்பிடியிலிருந்து மீட்டு மகத்தான சேவையை ஆற்றி வருகிறது.

இந்த உலகம் பஞ்ச பூதங்களால் இயங்கி வருகிறது. அதே போல் மனித உடம்பும் பஞ்ச பூதங்களாலேயே செயல்பட்டு வருகிறது.

  • மண்-எலும்பு, சதை, நரம்பு, தோல், மயிர்.

  • தண்ணீர்- பித்தம், இரத்தம், விந்து,கசிவு அல்லது கழிவு வியர்வை.

  • நெருப்பு- தாகம், தூக்கம், அழகு, சோம்பல்.

  • காற்று – சுருக்கம், விரிவு, அசைவு,

  • ஆகாயம்- வயிறு, இருதயம், கழுத்து, தலை இவைகளில் உள்ள இடைவெளி.

ஆகவே உலகத்திலுள்ள வஸ்துக்களெல்லாம் தோன்றலும், ஜீவித்தலும், அசைவதும், வளர்வதும், வளர்வதும் இறுதியாக அழிவதும், மறுபடியும் பஞ்சபூதங்களாவே மாறுகிறது. ஆகையால் பிறப்பு,காப்பு, இறப்பு இவைகளுக்கு காரணமாக உள்ளது.

பிருதிவி, அப்பு ஆக இரண்டும் உடம்பின் சதையில் பற்றிய உஷ்ணத்தைப் பரவச் செய்வதற்கு காரணமாக இருந்து உடம்பை வளர்க்கிறது.

தேயு-உடம்பில் உஷ்ணம் எழும்புவதற்கு காரணமாகவும், இவ்வுஷ்ணம் உணவை இரசமாக மாற்றி சீவ அணுக்களை ஏற்படுத்துகிறது. வாயு, ஆகாசம் ஆகிய இரண்டும் மூளையிலும் நரம்பு பாகங்களிலும் தங்கி இருந்து இயங்குகிறது. இப்படி இயற்கை விதிமுறைகளுக்கு கட்டுபட்டு அறிவியல் கண்ணோட்டத்தோடு செயல்பட்டுவருவது நம் இந்திய மருத்துவங்களின் தனி சிறப்பாகும்.