குணங்களும், குறிகளும்…!

இந்திய தேசங்கள்:

இமயம் முதல் குமரி வரை உள்ள தேசத்தை மூன்று பாகங்களாக்கி இமாச்சலம் முதல் மத்தியப் பாகம் வரை வாத தேசமாகவும், மத்தியப் பாகத்தை பித்த தேசமாகவும், தட்சணாப் பாகத்தை கப தேசமாகவும் அறிந்து கொள்ளலாம்.

நிலங்களும், தோஷங்களும்:

மலை பிரதேசம் (குறிஞ்சி நிலம்) வாதத்தை அதிகரிக்க செய்யும். மணல் பிரதேசம் (பாலை நிலம்) பித்த தேசமாகும். வயல் பிரதேசம் (மருத நிலம்) கபத்தை அதிகரிக்கச் செய்யும் தேசமாகும். காட்டு பிரதேசம் (முல்லை நிலம்) கபத்தையும், வாதத்தையும் அதிகரிக்கச் செய்யும் தேசமாகும். கடற்கறை பிரதேசம் (நெய்தல் நிலம்) வாதம், பித்தம் இவைகளை அதிகரிக்கச் செய்யும் தேசமாகும். அந்தந்த பிரதேசங்களுக்கு தகுந்தவாறு மருந்துகள் வழங்கப் பட வேண்டும். அப்போது தான் நோய் குணமாகும்.

தோஷங்கள் அதிகரிக்கும் மாதங்கள்:

  • மார்கழி, தை, மாசி, பங்குனி இந்த நான்கு மாதங்களும் வாதத்தை அதிகரிக்கும் காலமாகும்
  • சித்திரை, வைகாசி, ஆணி, ஆடி முதலான மாதங்களில் பித்தம் அதிகரிக்கும்
  • ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை முதலான மாதங்களில் கபத்தை விருத்தி செய்யும் மாதங்களாகும்.

வியாதிக்கு காரணங்கள்:

வாத பிரகோபம் இல்லாமல் உடம்பு வாட்டம் அடையாது. பித்தம் உடம்மை கெடுக்காமல் வாந்தியும் உண்டாகாது. கபம், பிரகோபம் இல்லாமல் இருமல் இல்லை. குடலில் குளிர்ச்சி ஏற்படாமல் ஜ்வரம் தீராது. மந்தம் ஏற்படாமல் ஜ்வரம் உண்டாகாது. மந்தம் மாறாமல் ஜ்வரமும் மாறாது. வாயு அதிகரித்தால் வீக்கமும் அதிகரிக்கும்.

ஜீரணம் ஏற்படாமல் ஜ்வரம் விடாது. திரிதோஷ காரணங்கள் இல்லாமல் ஜன்னி உண்டாகாது. நீர் இல்லாமல் சோகை ஏற்படாது. மேக ரோகம் இல்லாமல் சூலை ரோகம் ஏற்படாது. அபத்தியம் இல்லாமல் தோஷ பிரகோபம் குறைவடையாது. கப பிரகோபம் இன்றி காச ரோகம், சுவாச ரோகம் இவைகள் ஏற்படாது. கபம் இல்லாமல் வியர்வையும் குளிர்ச்சியும் உண்டாகாது.

காலம் அறிதல்:

மனிதர்கள் ஆயுளான 100 வயதில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 33 1/3 வயது வரை கபத்தின் காலமாகும். நடு பங்கு அதாவது, 33 1/3 வயது முதல் 66 1/3 வயது வரை பித்தம் அதிகரிக்கும் காலமாகும். கடைசி பங்கு 66 1/2 வயது முதல் 100 வயது வரை வாதத்தின் காலமென அறிந்து கொள்ளலாம்.

தினமும் தோஷங்கள் அதிகரிக்கும் விதம்:

காலையில் உதயம் முதல் பத்து நாளிகை வரை கபம் அதிகரிக்கும். நடுபகல் பத்து நாளிகை வரை பித்தத்தின் காலமாகும். சாயங்காலம் பத்து நாளிகைகள் வாதத்தின் காலமாகும். இது வியாதி இல்லாத சாதாரண மனிதர்களுக்கு உள்ள அறிகுறியாகும்.

தோஷங்களும் சுவைகளும்:

  • வாத தோஷம் அதிகமிருந்தால் புளிப்பு சுவையில் நாட்டம் ஏற்படும்.

  • பித்தம் அதிகமிருந்தால் கசப்பு சுவையில் நாட்டம் இருக்கும்.

  • கபம் அதிகரித்தால் தித்திப்பு சுவையில் நாட்டம் இருக்கும்.

  • வாதம், பித்தம், கபம் இவைகள் தொத்தி இருந்தால், துவர்ப்பு, உப்பு, கார்ப்பு முதலான சுவைகளில் இச்சை உண்டாகும்.

முகக் குறி:

கபம் அதிகரித்தால் நோயாளியின் முகம் முதலில் கரு நிறம்; அடைந்து பின்னர் வெண் நிறமாக மாறும்.

மலக் குறி:

  • வாதம் அதிகரித்தால் மலம் கரு நிறமடையும்.

  • பித்தம் அதிகரித்தால் மலத்திலிருந்து ஆவி எழும்புவதுடன் மஞ்சள் நிறமடையும்.

  • கபம் அதிகரித்தால் மலம் வெண் நிறமாகும்.

நீர் குறி:

வாதம் அதிகரித்தவர்களுக்கு சிறுநீர் கடுப்புடன் கொஞ்கமாக நுரையுடன் வெளிவரும். பித்த தோஷம் அதிகரித்தவர்களுக்கு சிறுநீர் சிவந்து எரிச்சலுடன் வெளியாகும். கப தோஷம் அதிகரித்தவர்களுக்கு நீர் வெண்மையாக இறங்கும். திரிதோஷம் உள்ளவர்களுக்கு சிறுநீர் பலநிறமாக வெளியாகும்.

விழிக் குறிகள்:

வாதம் அதிகமானால் கண் விழிகள் கரு நிறமாகும். இமைகள் தாழும். பித்தம் அதிகரித்தவர்களுக்கு விழிகள் மஞ்சள் நிறமடையும். கபம் அதிகரித்தவர்களுக்கு விழிகள் வெண் நிறமாகும். திரிதோஷம் உள்ளவர்களுக்கு விழிகள் பற்பல நிறமாகும்.

நாவின் குறி:

நாக்கில் அழுக்கு சேர்ந்து தடிப்பாகும். இவை வாதம் நோய் குறிகளாகும். பித்தம் அதிகரித்தால் நாக்கு மஞ்சள் நிறமாகி கசப்பு சுவையுடன் இருக்கும். கபம் அதிகரித்தால் நாக்கு வெண்மை நிறமாகி வழவழப்பாகும்.

தந்தக் குறிகள் (பல் குறிகள்):

வாதரோகம் உள்ளவர்களின் பற்கள் மிகவும் கருமை நிறமாக இருக்கும். பித்த ரோகம் உள்ளவர்களின் பற்கள் மஞ்சள் நிறமாக இருக்கும். கப ரோகம் உள்ளவர்களின் பற்கள் வெண் நிறமாக இருக்கும். முத்தோஷம் உள்ளவர்களுக்கு அந்தந்த தோஷ நிறங்களைக் கொண்டிருக்கும்.

வாத சரீர குணம்:

உடல் பெருத்திருக்கும். வாயு அடிக்கடி பிரியும். உடலில் குளிர்ச்சி உண்டாகும். பசி நன்றாக இருக்கும். உடலில் கடுப்பு வலி ஏற்படும். கார்ப்பு சுவையில் அதிக இச்சை உண்டாக்கும்.

பித்த தேக குணம்:

பித்த தேக உள்ளவர்கள் இளைத்து இருப்பார்கள். வெயிலைக் கண்டால் பயப்படுவார்கள். வெயிலில் வெளியே செல்ல யோசிப்பார்கள். தூக்கத்தில் அடிக்கடி கனவு காண்பார்கள். உடம்பில் காங்கை உண்டாகும். பெண்களிடத்தில் அதிக இச்சை உண்டாகும். கொஞ்சமாக சாப்பிடுவார்கள். அடிக்கடி கோபம் உண்டாகும்.

கப சரீர குணம்:

உடல் திமிர்ந்து விடும். மன திடம் உண்டு. பொய்யை மெய் போல் உரைப்பார்கள். பெண்களிடத்தில் ஆசை அதிகரிக்கும். உடலில் அடிக்கடி வியர்வை உண்டாகும். வந்தவர்களை உபசரிக்கும் எண்ணம் இருக்கும். கை, கால் முதலான இடங்களில் வியர்வை அரும்பியிருக்கும். சிறு இருமலும் கோழையும் வெளிப்படும்.

வாதப் பித்த கப சரீர குணங்கள்:

வாத பித்தம், வாத கபம், பித்த சிலேத்மம் இவைகள் உள்ளவர்கள் அந்தந்த குறிகளைப் பெற்றிருப்பார்கள். அது வித்தியாசப்பட்டால் வியாதியுள்ளவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

Dr.துரை பெஞ்சமின்., BAMS., M.A., SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,.
மருத்துவ மற்றும் வரலாற்றுச் சுவடிகள் ஆய்வாளர்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com