தொப்புளுக்கு கீழே மூலாதாரத்தில் ஓம் எனப்படும் ப்ரணவ ரூபமான குண்டலில் இருந்து எழும் நாடிகள்.
இடை
பிங்களை
சுழுமுனை
அத்திசிங்கு
காந்தாரி
அலம்புடை
புருடன்
குஷீ
சங்கினி இவைகளாகும்
இவைகளில் இருந்து 72 ஆயிரம் நரம்புகள் பிரிகிறது. ஓங்கி வளரும் ஆலமரத்தின் விழுதுகளைப் போல, உச்சி முதல் பாதம் முடிய தேகத்தில் விஸ்தாரமாக பரவி நிற்கின்றன.
நாடிகளின் எண்ணிக்கை:
தலையில் 7000 நாடிகளும்,
2 காதுகளிலும் 3010 நாடிகளும் உள்ளன.
இரு விழிகளிலும் 4000 நாடிகளும்,
மூக்கில் 3330 நாடிகளும்,
கண்ணப் பகுதிகளில் 5000 நாடிகளும்,
பிடரி கீழ் தோள் முதலான இடங்களில் 6800 நாடிகளும், வியாபிக்கின்றன.
கழுத்தில் 1000 நரம்புகளும்,
கைகளில் 3000 நாடிகளும்,
தொண்டைக்கு கீழே தொப்புளுக்கு மேலே 9610 நாடிகளும் உள்ளன.
முதுகின் மேல், பிடரிக்கு கீழே 8800 நாடிகளும்,
விலா பக்கங்களில் 440 நரம்புகளும்,
ஆண் குறி அல்லது பெண் குறி, அடிவயிறு முதலிய இடங்களில் 7700 நரம்புகளும் உள்ளன.
மூல நாடிகள் 5500-ம்,
சந்து துடை இடுக்குகளில் 2200 நாடிகளும்,
இரு கால்களிலும் 1756 நரம்புகளும் இருக்கின்றன.
நாடி முடிச்சுகளின் இருப்பிடம்:
நாடி முடிச்சுகள்
1) கோசம்,
2) தொப்புள்,
3) இருதயம்,
4) ஆண் குறி, பெண் குறி,
5) மூலாதாரம்,
6) பிடரி,
7) தலையின் உச்சி பாகம்
இவைகளில் நாடி முடிச்சுகள் காணப்படும். இவை 72 ஆயிரம் நரம்புகளாக இருக்கிறது.
தேகத்தில் நாடி பார்கும் இடம்:
72 ஆயிரம் நரம்புகளையும் அறிந்த பின்னர் வாதம், பித்தம், சிலேத்மம் இவை மூன்றையும் பரிசோதிக்க வேண்டும். ஆண்களுக்கு வலக்கையில் உள்ள நாடியையும், பெண்களுக்கு இடக்கையில் உள்ள நாடியையும் பார்க்க வேண்டும்.
கைகளைப் பிடித்து நெட்டி வாங்கி கட்டை விரலுக்கும் கீழே துடிக்கும் இடத்தையும் நீக்கி விட்டு பின்னர் பார்க்க வேண்டும்.
மருத்துவ நாடிகளை அறியும் விதம்:
மருத்துவர் நோயாளியின் கைகளில் தனது ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் இவைகளை வைத்து பார்க்கும் போது, ஆள்காட்டி விரலில் வாதமும், நடு விரலில் பித்த நாடியும், மோதிர விரலில் கப நாடியும் ஓடும்.
வாத நாடியின் லச்சணம்:
வாத நாடியின் நடை குயில் போலவும், அன்னம், கோழி, மயில், இவைகளை ஒத்த நடை போல காணும்.
பித்த நாடி லச்சணங்கள்:
பித்த நாடி அட்டை, ஆமை, முதலான ஜந்துக்களின் நடையை ஒத்து இருக்கும்.
கப நாடி லச்சணங்கள்:
கப நாடி தவளை, பாம்பு இவைகளை போல் ஊர்ந்து செல்லும்.
வாதம் இரண்டும், பித்தம் ஒன்றும் உள்ள நாடிகளின் லச்சணம்:
தலையில் சுமையை தூக்கி கொண்டு நடந்து செல்லும் மனிதனை போல நாடியின் நடை தென்படும்.
பித்தம் 2 கபம் 1 இருக்கும் நாடிகளின் லச்சணம்:
தூங்கும் குழந்தை தொட்டிலில் ஆடுவதைப் போல, நடு விரலில் நாடி அசைந்து, அசைந்து ஆடும்.
சிலேத்மம் 2 வாதம் 1 இருக்கும் லச்சணம்::
சிலேத்மம் இரு பங்கும், வாதம் ஒரு பங்குமாக நாடி ஓடும் போது, பினையலில் உள்ள நாகங்களை ஒத்துயிருக்கும்.
வாதம் 2 கபம் 1 ஓடும் நாடிகளின் லச்சணங்கள்:
அரணை வாழ் முறிந்து விழுந்தால் அது எவ்வாறு துள்ளி துள்ளி சுழண்டு வருமோ அவ்வாறு நாடி சுழண்டு சுழண்டு துள்ளி வரும்.
பித்தம் 2 வாதம் 1 ஓடும் நாடிகளின் லச்சணங்கள்:
அடித்தால் துள்ளி விழுவதை போன்று நாடிகளின் நடை காணும்.
சிலேத்மம் 2 பித்தம் 1 ஓடும் நாடிகளின் லச்சணங்கள்:
சிலேத்ம பித்த நாடி இரையெடுத்த பாம்பை போன்ற கதியை அடைந்து இருக்கும்.
தேகத்தில் வாத பித்த கப தோஷங்களின் இருப்பிடம்:
குதப்பிரதேசம் வாதத்தின் ஸ்தானமாகவும், தொப்புள் பகுதி பித்த ஸ்தானமாகவும், இருதயம் கப ஸ்தானமாகவும் இருந்து வருகிறது.
வாத தோஷம் அதிகரித்ததின் லச்சணங்கள்:
வயிறு மந்நமாகும், மூட்டுகள், கால்கள் முதலான இடங்களில் வலி உண்டாகும். தாது நஷ்டம் உண்டாகும். சிறுநீர் கடுத்து இறங்கும்.
பித்த தோஷம் அதிகரித்ததின் லச்சணங்கள்:
விழிகள் சிவந்து காணும். கண்கள் குழி விழும், பார்வை குறை ஏற்படும். சிறுநீர் கடுத்து சிவந்த நிறத்துடன் விழும். தலை சுற்றல் நாவரச்சி இவைகள் ஏற்படும்.
கப தோஷம் அதிகரித்ததின் லச்சணங்கள்::
உடம்பு வியர்த்து ஜில்லிட்டு விடும். வாயில் அதிகமாய் உமிழ் நீர் ஊறும். நாக்கில் தித்திப்பு சுவையும் வழவழப்பும் உண்டாகும். உடம்பு வெளுத்து போகும். இவை கபம் அதிகரித்தால் ஏற்படும் குறிகளாகும்.
வாத பித்த குறிகள்: (வாதம் 2 பித்தம் 1)
உடம்பில் வலி, தாகம், மயக்கம், தீராத மனக் கவலை, உணவு செரியாமை இவைகள் ஏற்படும்.
பித்த சிலேத்ம குறிகள்: (பித்தம் 2 கபம்1)
பசி எடுக்காது. அடிக்கடி வயிறு உப்பும். கண்கள் மஞ்சள் நிறம் ஆகும். சிறுநீர் மஞ்சள் நிறத்துடன் இறங்கும். பிதற்றல் ஏற்படும். இவைகள் பித்த கபக் குறிகளாகும்.
கப வாத குறிகள்: (சிலேத்மம் 2 வாதம் 1)
நோயாளி இனிப்பை அதிகம் விரும்புவான். பசி அதிகமாய் இருக்கும். உடலில் காங்கை ஏற்படும். இவை கப வாத குறிகளாகும்.
பித்த வாத குறிகள்: (பித்தம் 2 வாதம் 1)
உடம்பில் குடைச்சல் வலி ஏற்படும். புகைச்சல், நெஞ்சில் எரிச்சல் உண்டாகும். நாவரச்சியுடன் மூத்திரமும் கடுத்து இறங்கும். இவை பித்த வாத குறிகளாகும்.
கப பித்த குறிகள்: (கபம்; 2 பித்தம் 1)
ஜன்னி உண்டாகும். உடல் குளிர்ச்சி உண்டாகும். தலை உச்சியில் வலி ஏற்படும். காது கேளாது. நாக்கில் தித்திப்பு சுவை இருக்கும். ஆகாரம் செரிக்காது. இவை கப பித்த குறிகளாகும்.
வாத கபப் குறிகள்: (வாதம் 2 கபம் 1)
சரீரத்தில் வலி உண்டாகும்.அதற்கு அடிப்படையாக இருக்கும் நாடி லச்சணங்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். கை, கால் இவைகளில் மதமதப்பு ஏற்படும். வயிற்று வலி உண்டாகி பொருமலும் உண்டாகும். இவை வாத கப குறிகளாகும்.
நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு அடிப்படையாக இருக்கும் நாடி லச்சணங்களை முதலில் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.
இதை தான்,
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.- என்கிறார் நமது திருவள்ளுவப் பெருந்தகை.
–Dr.துரை பெஞ்சமின்., BAMS., M.A., SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,.
மருத்துவ மற்றும் வரலாற்றுச் சுவடிகள் ஆய்வாளர்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com