உடல் அமைப்பு
நமது தேகத்தைத் தலை, நடு உடல், கை, கால்கள் என மூன்று முக்கிய பாகங்களாகப் பிரிக்கலாம். நடு உடலில் தேகத்தின் முக்கியமான உறுப்புக்கள் பல இருக்கின்றன. இதில் உதர விதானம் என்கிற மெல்லிய சுவர் போன்ற சவ்வு இருக்கிறது. அது நடு உடலை மேல், கீழ் என இரு பாகமாகப் பிரிக்கிறது. மேற் பகுதிக்கு மார்பு என்றும் கீழ்ப் பகுதிக்கு வயிறு என்றும் பெயர். மார்புக் கூட்டிலே இதயமும் நுரையீரல்களும் இருக்கின்றன. அதன் பின் பக்கத்தில் மூச்சுக் குழலும் நுரைப்புக் குழாயும் இருக்கின்றன. வயிற்றில் கல்லீரலும் இரைப்பையும் மண்ணீரலும் கணையமும் சிறுகுடலும் பெருங்குடலும் இடம் பெற்றுள்ளன. சிறுநீரகங்கள் இரைப்பைக்குப் பின்புறம் அமைந்துள்ளன.
உடம்பின் ஒவ்வொரு உறுப்புக்கும் தனித் தனி வேலை உண்டு. பல உறுப்புக்கள் சேர்ந்து உழைக்கும். உதாரணமாக, உணவை ஜீரணம் பண்ண வாய், பல், உணவுக்குழல் இரைப்பை, சிறுகுடல் பெருங்குடல், கணையம் இவையெல்லாம் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும். இவற்றுக்கு ஜீரண உறுப்புக்கள் என்று பெயர். மூக்கு, முன் தொண்டை, மூச்சுக்குழல், நுரையீரல் இவைகள் சுத்தமான காற்றை உட்கொள்ளவும், கரியமிலவாயுவை வெளியே போக்கவும் சேர்ந்து உழைக்கின்றன. இதனால் இவைகளுக்கு மூச்சு உறுப்புக்கள் என்று பெயர். இதயமும் இரத்த நாடிகளும் இரத்தத்தைத் தேகம் முழுவதும் பரவச் செய்யச் சேர்ந்து உழைக்கின்றன. எனவே இவைகள் இரத்த ஓட்ட உறுப்புக்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிறுநீரகங்களும் சருமமும் நுரையீரல்களும் கல்லீரலும், பெருங்குடலும் உடம்பில் உள்ள கழிவுப் பொருள்களை வெளியேற்றுகின்றன. எனவே இவைகள் கழி உறுப்புக்கள் எனப்படுகின்றன. மூளையும், தண்டுவடமும் பெரு நரம்புகளும் சிறு நரம்புகளும் பிற உறுப்புக்களை ஆளவும் அடக்கவும் ஒத்துழைக்கின்றன. இவற்றைத்தவிர, சட்டம் போல் இருந்து உடம்புக்கு வடிவம் தருகின்ற எலும்புகளும் உடம்பின் எல்லாப் பாகங்களையும் இயக்குகிற தசைகளும் இருக்கின்றன.
தேகத்தின் எல்லாப் பாகங்களும் வேண்டிய ஊட்டம் பெற்று, நன்றாகப் பாதுகாக்கப்பட்டு வந்தால், பூரண ஆரோக்கியம் உண்டு.
ஆறு ஆரோக்கிய விதிகள்
உடம்பைப் பாதுகாக்கவும் ஆரோக்கியமாக வாழவும் தேவைப்படும் சங்கதிகளைக் கீழ்க்கண்ட ஆறு விதிகள் தெரிவிக்கின்றன.
-
உடம்புக்குச் சரியான உணவும் பானமும் வேண்டும்.
-
சூரிய வெளிச்சமும் சுத்தமான காற்றும் ஏராளமாக வேண்டும்.
-
உடம்புக்குள் உண்டாகும் கழிவுப்பொருளை அவ்வப்பொழுது கழித்துவிட வேண்டும்.
-
சீத உஷ்ணங்களால் தேகம் தீங்குறாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.
-
முறையான உடற்பயிற்சியும் போதிய ஓய்வும் தேவை.
-
நச்சுப் பொருள்களும் நோய்க் கிருமிகளும் உடம்புக்குள் புகாத வண்ணம் எப்பொழுதும் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்.
இந்த ஆறு விதிகளையும் அனுசரித்தால் வியாதி வராது. நெடு நாள் வாழலாம். அனுசரிக்கத் தவறினால் நோய் வந்து ஒரு நாள் நம்மைப் பிடித்துக்கொண்டுவிடும்.