தமிழகத்தில் காற்றாலை மூலம் கிடைக்கும் உபரி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு வழங்க மின் வழித்தடத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம்.

jjTNCMJJ

பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நாட்டில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை மேம்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பது உங்களுக்கு தெரிந்ததுதான். இன்று தமிழகம் காற்றாலை மூலம் 7,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறனைப் பெற்றுள்ளது. இது நாட்டின் மொத்த காற்றாலை மின் உற்பத்தியில் 27 சதவீதம் பங்களிப்பாகும்.

மேலும், சூரிய ஒளி மூலம் 1,142 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறனை தமிழகம் பெற்றுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் காற்றாலை மூலம் கூடுதலாக 4,500 மெகாவாட் மின்சாரம், சூரிய ஒளி மூலம் 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்பது எங்கள் இலக்காகும்.

தமிழ்நாட்டில் பருவ நிலைக்கு ஏற்ப குறிப்பாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையே காற்றாலை மின் உற்பத்தி தயாரிக்கப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை தயாரித்து முழுமையாக நுகர்வுக்கு பயன்படுத்தினால்தான் அது உண்மையான பலனாக அமையும். அதற்கு காற்றாலை மின்சாரத்தை பரிவர்த்தனை செய்வதற்கான உள்கட்டமைப்பு அமைக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

அந்த வகையில் மாநிலங்களுக்கு இடையிலான மின் பரிவர்த்தனைக்கான பசுமை எரிசக்தி மின் தடத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு தேசிய எரிசக்தி நிறுவனத்திடம் இருந்து உதவிகள் அளிக்க உதவும்படி அப்போதைய பிரதமருக்கு 16-09-2013 அன்று நான் கடிதம் எழுதினேன்.

அதன் அடிப்படையில் தேசிய எரிசக்தி நிறுவனம் மற்றும் ஜெர்மன் நாட்டின் ஒரு உதவிக் கடிதம் மூலம் நிதி பெற்று மாநிலங்களுக்கு இடையிலான மின் பரிவர்த்தனைக்கான பசுமை எரிசக்தி மின் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் தமிழ்நாட்டில் 4,400 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான மின் பரிவர்த்தனை உள்கட்டமைப்பை பயன்படுத்திய போதிலும், காற்றாலை மூலம் கிடைத்த மின்சாரத்தை தமிழகம் முழுமையாக பயன்படுத்த முடியாமல் போய் விட்டது.

தற்போது தமிழகம் 1,000 மெகாவாட் காற்றாலை மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்யும் நிலையில் உள்ளது. தமிழகம் ஏற்கனவே புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் தன்னிறைவு பெற்றுள்ளது.

பெரும்பாலான மாநிலங்கள் இன்னும் அந்த நிலையை எட்டவில்லை. அந்த மாநிலங்கள் தமிழ்நாட்டில் இருந்து புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வாங்குவதற்கு அணுகியபடி உள்ளன.

புதுப்பிக்கத்தக்க மின்சாரம் தேவை உள்ள மாநிலங்களுக்கு தமிழகம் மின்சாரத்தை விற்பனை செய்ய வேண்டுமானால், மாநிலங்களுக்கு இடையிலான பசுமை எரிசக்தி மின் வழித்தடம் அமைக்கப்பட வேண்டும். அந்த வழித்தடம் மூலமே தமிழகம் வெற்றிகரமாக உபரி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்ய முடியும்.

தேசிய மின் பகிர்மானக் கடிதம் அத்தகைய பசுமை எரிசக்தி வழிதடத்தை அமைக்க ஏற்கனவே பரிந்துரை செய்திருப்பதை நான் அறிவேன். எனவே, தமிழக அரசு 1,000 மெகாவாட் காற்றாலை உபரி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு கொடுப்பதற்கு வசதியாக விரைந்து அந்த திட்டத்தை நிறைவேற்ற தாங்கள் மின் அமைச்சகத்தை அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அந்த பசுமை எரிசக்தி மின் வழித்தடம் அமைக்கப்பட கால தாமதம் ஏற்படும் பட்சத்தில், தமிழக அரசு தன் உபரி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு கொடுப்பதற்கு வசதியாக, பயன்பாட்டில் உள்ள மின் வழித்தடத்தில் முன்னுரிமை அடிப்படையில் தமிழகம் மின்சாரத்தை கொடுக்க ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com