நாங்கள் நடத்தி வருகின்ற இந்திய ஜனநாயகக் கட்சியின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, அவர்களே ஏற்படுத்திக் கொண்ட பொறாமை மற்றும் பகை உணர்ச்சிகளின் காரணமாக இந்திய ஜனநாயகக் கட்சி மற்றும் எஸ்.ஆர்.எம் குழுமம் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் மீது சேறு பூசும் நிகழ்வை தொடர்ந்து சன் குழுமம் சிலரது தூண்டுதல் மற்றும் பின்னணியில் செயல்படுத்தி வருகிறது.
ஆதி திராவிடர்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலம் உட்பட 371 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை எஸ்.ஆர்.எம் குழுமம் ஆக்கிரமித்துள்ளதாக, வெளியாகியுள்ள செய்தியில் துளியளவும் உண்மையில்லை.
குறிப்பாக, எஸ்.ஆர்.எம் நிறுவனம் குறித்து சன் குழுமத்தில் வெளியாகும் செய்திகளில், ஒரு வழக்கை மேற்கோள் காட்டுகிறார். ஆனால், அடிப்படையில் அந்த வழக்கே ஒரு பொய்யான வழக்காகும். அந்த வழக்கில் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதா? என்று கேட்டு அரசுத் துறைகள் பதில் மனு தாக்கல் செய்யவும், எஸ்.ஆர்.எம் குழுமம் பதில் தரவும் வாய்ப்பளிக்கப்பட்டு செப்டம்பர் மாதத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில், சன் குழுமம் ஒரு இணை விசாரணையை எவ்வித ஆதாரமுமின்றி நடத்தி வருகிறது.
371 கோடி ரூபாய் மதிப்பிலான 37 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு என்று செய்தி வெளியிடப்படுகிறது. ஆனால், அந்த 37 ஏக்கரில் 29 ஏக்கர் நிலம் பொதுமக்கள் பயன்படுத்தும் பொது ஏரியாகும். அந்த பகுதியின் நிலத்தடி நீர் தேவையை உணர்ந்து, பல கோடி ரூபாய் செலவில் அதன் கொள்ளளவை விட இரண்டு மடங்கு ஏரியை ஆழப்படுத்தியும், கரைகளை பலப்படுத்தியும், பொதுமக்கள் சென்றுவரும் நடைபாதையும் அதற்கான முறையான அனுமதியை மாவட்ட ஆட்சியரிடம் பெற்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்தப் பகுதி கிராம மக்களே சாட்சி. மேலும், காட்டாங்குளத்தூர் வழியாக செல்லும் யாரும் அதனை பார்க்க முடியும்.
அது தவிர மீதமுள்ள எட்டு ஏக்கர் நிலம் தொடர்பாக தகுந்த ஆவணங்கள் எங்கள் குழுமத்திடம் உள்ளன. அரசிடம் முறையாக குத்தகை தொகை இன்றளவிலும் செலுத்தப்பட்டு, அதற்கு ரசீதுகள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில், எந்தவிதமான வழிகாட்டு நெறிமுறைகளையும் கருத்தில் கொள்ளாமல், 371 கோடி ரூபாய் முறைகேடு என்று போடப்பட்டுள்ள வழக்கும், அது சார்ந்த செய்தியும் அடிப்படை அற்றது. அதனை சட்டப்படியாக பதில் மனு தாக்கல் செய்து எஸ்.ஆர்.எம் குழுமம் சந்திக்கத் தயாராகவே உள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கின்ற பொழுது, ஒருதலை பட்சமாக, ஒரு சாராரின் கருத்தை மட்டுமே, ஒளிபரப்புவது என்பது இயற்கை நியதி மற்றும் ஊடக தர்மத்திற்கு முரணானது.
அதேபோல், திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் குழுமத்தின் மருத்துவ கல்லூரி, அனுமதியின்றி இயங்கி வருவதாக ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நல்ல முறையில் தொடர்ந்து இயங்கி வரும் ஒரு கல்லூரியை அங்கீகாரமற்றது என்று குறிப்பிடுவது விஷமத்தனமானது. மேலும், சிபிஐ அதிகாரிகள் அங்கு வந்ததாக சொல்வதிலும் உண்மையில்லை. கல்லூரியின் அங்கீகாரம் குறித்த அதிகாரபூர்வ தகவல்களை இந்திய மருத்துவக் கழகத்தினுடைய இணைய தளத்தில் (MCI) யார் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.
அதேபோல், வருமானவரி சோதனை என்பது, எல்லா பெரிய நிறுவனங்களிலும் நடைபெறும் ஒன்றுதான். எஸ்.ஆர்.எம் குழுமத்திலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அதில் முறையான ஆவணங்களின் அடிப்படையில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்று, துறை சார்ந்த அதிகாரிகளே முடிவு செய்தார்கள். எஸ்.ஆர்.எம் கல்லூரி குழுமம் சார்ந்து சிபிஐ விசாரணை எதுவும் நடைபெறவில்லை, மற்றும் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பதும்தான் உண்மையான செய்தியாகும்.
மேலும், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள், குற்றம் சாட்டியதையும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பதையும் வெளியிட்ட சன் குழுமம், அதைத் தொடர்ந்து நாங்கள் கொடுத்த விரிவான விளக்க அறிக்கையை ஏன் வெளியிடவில்லை. மேலும், வன்னியர் அறக்கட்டளை தொடர்பாகவும், அவரது மகள் ஆக்கிரமிப்பு செய்த நிலம் தொடர்பாகவும் கொடுக்கப்பட்ட புகார்கள் குறித்த செய்தியை சன் குழுமம் எந்த ஆரோக்கிய அரசியல் அடிப்படையில் வெளியிடவில்லை என்று தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மதன் வழக்கில், புலனாய்வு நடைபெற்று வரும் நிலையில் அதற்கு, எங்கள் குழுமத் தரப்பில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வரும் நிலையிலும் தான்தோன்றித் தனமாக குற்றச்சாட்டுக்களை செய்திகளாக வெளியிடுவது சன் குழுமத்தின் பத்திரிகை தர்மத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. மதன் அனுப்பியதாகச் சொல்லப்படும் தற்கொலைக் குறிப்பில் இல்லாத ஒரு செய்தியை, அவர் ஏதோ தான் வசூலித்த பணத்தை, எங்களது குழுமத் தலைவர் திரு.ரவிபச்சமுத்து அவர்களிடம் கொடுத்தாகக் கூறியுள்ளார் என்று இட்டுக்கட்டிய செய்தியை சன் குழுமம் தொடர்ந்து ஒளிப்பரப்பும் உள்நோக்கம் என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும். அதேபோல், நில ஆக்கிரமிப்பு தொடர்பாக, அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய்ப்புகார், முழுக்க முழுக்க ஒரு சிவில் வழக்காகும். உண்மை நிலவரங்கள் இப்படி இருக்க, சன் குழுமம் தொடர்ந்து பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதன் நோக்கத்தை அறஉணர்வுள்ள பொதுமக்கள் உணர்ந்து கொள்வார்கள்.
இந்த தருணத்தில், சன் குழும ஊடகங்களிடம் சில செய்திகளை ஒளிபரப்பித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கைது நடவடிக்கைக்கு பயந்து, முன்ஜாமீன் கேட்டு நீதிமன்ற படிகளில் காத்திருக்கும் கலாநிதி, தயாநிதி ஆகியோர் குறித்த செய்திகளை புலனாய்வு செய்து வெளியிட வேண்டும்.
- தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி, ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மேக்சிஸ் விற்கச் சொல்லி வற்புறுத்தியதையும், அதன் பின்னணியையும் ஒளிபரப்பு செய்ய வேண்டும்.
- ஒரு தொலைபேசி எண்ணைக் கொண்டு, 400 இணைப்புகள் எப்படி பெறப்பட்டன, அதனால் அரசுக்கு 400 கோடி ரூபாய் இழப்புக்கு என்ன பதில் என்ற சிதம்பர ரகசியத்தையும் சன் குழும புலனாய்வு குழு வெளியிட வேண்டும்.
சாதாரண ஆசிரியராக இருந்து கடும் உழைப்பால் உயர்ந்த என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் எங்கள் உழைப்பின் மீதும் சந்தேகங்களை எழுப்பும் சன் குழுமத்தை நோக்கி ஒரே கேள்வி, திரு முரசொலி மாறன் சென்னைக்கு வந்தபோது அவரின் சொத்து மதிப்பு என்ன, தற்போது சன் குழுமத்தின் சொத்து மதிப்பு என்ன? எப்படி அது பல்லாயிரம் கோடியாக உயர்ந்தது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட சன்குழுமம் தயாரா?
மேலும் பலமுறை விளக்கமளித்தும், தொடர்ச்சியாக எஸ்.ஆர்.எம். குழுமத்தின் மீது அவதூறு செய்திகளை ஒளிபரப்பியும், பிரசுரித்தும் வரும் சன் குழுமமத்தின் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க தயங்கமாட்டோம் என்பதையும் இந்த அறிக்கை வாயிலாக தெரிவித்துக்கொள்கின்றேன்.
இவ்வாறு இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் பாரிவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.
-ஆர்.மார்ஷல்.
எஸ்.ஆர்.எம் (SRM) குழுமத்தின் மருத்துவ கல்லூரி அனுமதி குறித்து, இந்திய மருத்துவக் கவுன்சில் (Medical Council of India) தெரிவித்துள்ள விபரங்களை, நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்:
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com