திருச்சியில் நேற்று (27.07.2016) இரவு பெய்த மழையில் திருச்சி மேலபுதூர் ரயில்வே இரும்பு பாலத்திற்கு கீழ் உள்ள சுரங்கப் பாதையில் 4 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கி நின்றது. அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து ஒன்று மழை நீரில் சிக்கிக்கொண்டது. பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் மழைநீரில் இறங்கி நடந்து சென்றனர். செயல் இழந்த பேருந்து இரவு 11.30 மணி வரை சுரங்கப்பாதையிலேயே நின்றது. இதனால் வாகன ஓட்டுநர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.
இன்று (28.07.2016) காலை 11 மணி வரை மழை நீர் முழுமையாக வெளியேற்றப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், பணிக்கு செல்லும் பொதுமக்களும், சுரங்கப் பாதையை கடக்க முடியாமல் அவதிப்பட்டார்கள். இதனால் பாலக்கரை மற்றும் பீமநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இரண்டு மணிநேர மழைக்கே இவ்வளவு பிரச்சனை என்றால், கனமழை மற்றும் அடைமழைக் காலங்களில் நிலமை என்னாகும்? இப்பிரச்சனை இன்று, நேற்று அல்ல, பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. ஆனால், திருச்சி மாநகராட்சி நிர்வாகம் இதை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
இதுக்குறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் என்.எஸ்.பிரேமாவிடம், இன்று காலை 11 மணிக்கு அலைபேசி மூலமாக தகவல் தெரிவித்தோம். மழை நீர் தேங்கி நிற்கும் புகைப்படங்களை வாட்ஸ் அப் மூலமாகவும் அவருக்கு அனுப்பி வைத்தோம்.
இதுக்குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக நம்மிடம் அவர் உறுதி அளித்தார். தகவல் தெரிவித்தற்காக நமக்கு நன்றியும் தெரிவித்தார்.
ஆனால், இச்செய்தி பதிவேற்றம் செய்யும் வரை, மழை நீர் வெளியேற்றப்படவில்லை. இந்நிலை தொடர்ந்து நீடித்தால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com