1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் கச்சத்தீவு தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களை நீக்குவதன் மூலமே பாக் நீரிணை பகுதியில் தமிழக மீனவர்கள் பாரம்பரிய உரிமையோடு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியும்: பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம்.

tn.cm jjtncm lr to pm

பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம், மீண்டும் நடந்திருப்பதை உங்கள் கவனத்திற்கு இந்த கடிதம் மூலம் கொண்டு வருகிறேன்.

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து ஒரு எந்திரப் படகில் 4 மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது கடந்த 8-ந் தேதி இலங்கை கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை காங்கேசன்துறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மனதில் அமைதியின்மையை ஏற்படுத்தி உள்ளது.

பாரம்பரிய பகுதியில் அப்பாவி தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலை மேற்கொள்ளும் போது அவர்களை இலங்கை அரசு கைது செய்வது நிறுத்தப்பட வேண்டும் என்பதற்கான உறுதியான, தெளிவான தகவல் அனுப்பப்பட வேண்டும்.

1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் கச்சத்தீவு தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களை நீக்குவதன் மூலமே பாக் நீரிணை பகுதியில் தமிழக மீனவர்கள் பாரம்பரிய உரிமையோடு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியும். கச்சத்தீவை மீட்டு எடுப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நான் எனது தனிப்பட்ட நிலையில் வழக்கு தொடர்ந்து உள்ளேன். அதில், தமிழக அரசு தன்னை இணைத்துக்கொண்டுள்ளது.

கைப்பற்றப்படும் மீன்பிடி படகுகளை விடுவிக்காமல் இருக்கும் இலங்கை அரசின் நிலையால் தமிழக மீனவர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அந்த படகுகள் தொடர்ந்து கடுமையான சேதங்களை அடையாதபடி, அவற்றை உடனே விடுவிப்பதை உறுதி செய்யும் வகையில் இலங்கை அரசின் உயர்மட்ட அதிகாரிகளிடம் நீங்கள் இதை கொண்டு செல்ல வேண்டும்.

கடல்சார் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு எனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது உங்களுக்கு தெரியும். இது தொடர்பாக ஒரு ஒருங்கிணைந்த சிறப்பு நிதி உதவியாக ஆயிரத்து 1,520 கோடி ரூபாயை கேட்டு கடந்த 3.6.14, 7.8.15, 14.6.16 ஆகிய தேதிகளில் உங்களிடம் மனு கொடுத்து இருக்கிறேன்.

மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரமும், அவர்களுடைய படகு விடுவிக்கப்படுவது தொடர்பான பிரச்சினையையும் உயர்மட்ட அளவிற்கு எடுத்துச் செல்வதோடு, தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள 4 மீனவர்களையும், அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் 103 படகுகளையும், மீட்பதற்கு நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com