மணிப்பூர், அஸ்ஸாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களும், அந்தமான்-நிகோபார் தீவுகளுக்கு புதிய துணைநிலை ஆளுநரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, மத்திய அமைச்சரவையிலிருந்து அண்மையில் ஓய்வுபெற்ற நஜ்மா ஹெப்துல்லா, மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு, மணிப்பூர் ஆளுநர் பொறுப்பை மேகாலய ஆளுநர் வி.சண்முகநாதன் கூடுதலாக கவனித்து வந்தார்.
அஸ்ஸாம் மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் பா.ஜ.க. எம்.பி. பன்வாரிலால் புரோஹித் அறிவிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிரத்தின் நாகபுரி தொகுதியிலிருந்து மூன்று முறை மக்களவைக்கு எம்பியாக பல்வேறு காலகட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட பன்வாரிலால், தற்போது “தி ஹித்வாடா’ என்ற பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராக இருக்கிறார்.
பஞ்சாப் மாநில புதிய ஆளுநராக மாநிலங்களவை முன்னாள் பா.ஜ.க. எம்.பி. வி.பி. சிங் பத்னோர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
அதேபோல், அந்தமான் – நிகோபார் தீவுகளின் புதிய துணைநிலை ஆளுநராக ஜெகதீஷ் முகி அறிவிக்கப்பட்டுள்ளார் என குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ஆர்.மார்ஷல்.