காவேரியில் நடுவர்மன்ற தீர்ப்பின்படி, கடந்த 19-ம் தேதிவரை தமிழகத்திற்கு தரவேண்டிய 50 டி.எம்.சி. அடி தண்ணீரை 10 நாட்களுக்குள் கர்நாடக அரசு திறந்துவிட உத்தரவிடக்கோரி, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அறிவுறுத்தலின்படி, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 19-ம் தேதி அன்று சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வெளியிட்டார்.
காவேரி நடுவர்மன்ற தீர்ப்பை மதித்து, கடந்த ஜூன் முதல் ஜூலை 26-ம் தேதிவரை தமிழ்நாட்டிற்கு காவேரியில் 22 புள்ளி ஒன்பது மூன்று நான்கு டி.எம்.சி. அடி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால், இதுவரை திறந்துவிடப்படவில்லை என்றும் தெரிவித்தார். இதுதொடர்பாக கர்நாடக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பலமுறை வலியுறுத்தியும்கூட, எந்த பதிலும் கிடைக்காததால், உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
அதன்படி, தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனுவில், கடந்த 19-ம் தேதி வரை கர்நாடகத்தில் இருந்து கிடைத்திருக்க வேண்டிய 50 டி.எம்.சி. அடி காவேரி நீரை 10 நாட்களுக்குள் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்றும், அப்போதுதான் காவேரி டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிரை காப்பாற்ற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com