ஒடிசா மாநிலம், காலாகேண்டி அருகே உள்ள மெல்கர் எனும் கிராமத்தில் வசித்து வருபவர் தானா மஜ்கி. காச நோயினால் பாதிக்கப்பட்ட இவருடைய மனைவி அமங் டே(42) பவானிபாட்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த செவ்வாய் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இறந்த தனது மனைவியின் உடலை சொந்த கிராமத்திற்கு எடுத்துச் செல்ல வாகனம் ஏற்பாடு செய்யும்படி மருத்துவமனை அதிகாரிகளிடம் தானா மாஜ்கி கேட்டிருக்கிறார். ஆனால், இதற்கு மருத்துவமனை ஊழியர்கள் மறுத்து விட்டனர்.
உடனே, மஜ்கி இறந்த மனைவியின் உடலை போர்வையால் சுற்றி தோளில் சுமந்துவாறு தனது 12 வயது மகளுடன் நடந்தார். 10 கிலோ மீட்டர் தொலைவு கடந்ததும், உள்ளூர் தொலைக்காட்சி செய்தியாளர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டது.
அதன் பிறகு மனைவியின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி சென்றார். இச்சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தானா மஜ்கியின் கிராமம் மருத்துவமனையில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-எஸ்.சதிஸ் சர்மா.