தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடியில் கேரள அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதுபற்றி சுற்றுச்சூழல் ஆய்வு நடத்துவதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் வல்லுநர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழக அரசின் கருத்தினைக் கேட்காமல் அளிக்கப்பட்ட இந்த பரிந்துரையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
சிறுவாணி ஆறு மாநிலங்களுக்கிடைய பாயும் காவிரி ஆற்றின் கிளை நதியாகும். எனவே, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை மீறும் வகையில் ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை கேரளம் தொடங்கக்கூடாது என அறிவுறுத்த வேண்டும் என 21.06.2012 அன்று அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்க்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.
அதன்பின்னர் தமிழக அரசு தொடர்ச்சியாக ஆட்சேபம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், அட்டப்பாடி அணை திட்டம் தொடர்பாகவோ, அதுபற்றி வல்லுநர்கள் குழுவின் 96-வது கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என்றோ சுற்றுச்சூழல் துறை தமிழக அரசுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தவில்லை. இது வருத்தம் அளிக்கிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதுபோன்ற சூழ்நிலையில், அட்டப்பாடியில் அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்துவதற்கு அளித்த பரிந்துரையை உடனே திரும்ப பெற மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீரை முறைப்படுத்தும் குழுவை அமைக்க வேண்டும். அதுவரையில், காவிரி படுகையில் கேரளா மற்றும் கர்நாடகாவின் எந்த திட்டத்திற்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்றும் தாங்கள் அறிவுறுத்தவேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதோ! தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா 21.06.2012 அன்று அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்க்கு எழுதிய கடிதம். நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com