ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், இலங்கை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரேவை யாழ்ப்பாணத்திலுள்ள அவருடைய வதிவிடத்தில் 02.09.2016 அன்று சந்தித்தார்.
வடக்கில் இராணுவத்தின் அளவை குறைக்குமாறும், பொது மக்களின் காணிகளை விரைவாக மீளளிக்குமாறும், ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூன் தன்னிடம் கோரிக்கை விடுத்தார் என்று, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்குமாறும், அரசாங்கத்தின் மாற்றங்களுக்கான வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துமாறும், பான் கீ மூன் கோரினார். மேலும், புதிய அரசாங்கத்தின் நல்லிணக்க வேலைத்திட்டங்களை அவர் பாராட்டியமை விஷேட அம்சமாகும் என்றும் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டார்.
இந்நிலையில், அரசுக்கு தேவை ஏற்படும் பட்சத்திலேயே வடக்கு கிழக்கில் இராணுவம் குறைக்கப்படும். ஐ.நா கூறுகின்றது என்பதற்காக தேசிய பாதுகாப்பில் அவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கு கிழக்கில் இராணுவம் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது, முழுமையாக இராணுவத்தை நீக்க வேண்டுமென்பதை பாதுகாப்பு தரப்பினரும், அரசாங்கமும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
-வினித்.