தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ.2 கோடி பரிசு: தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிவிப்பு!

MARIAPPAN THANGAVELUmariappan thangavelutncm jjadmk

பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ.2 கோடி பரிசுத்தொகையை தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாராலிம்பிக்கில் மாரியப்பன் தங்கவேலு தங்கப் பதக்கம் வென்றது இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை. பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதன்முறை. மாரியப்பனின் சாதனை இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஊக்கத்தை அளிக்கும். தமிழக அரசு சார்பில் அவருக்கு ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும்என்று கூறியுள்ளார்.

பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இது ரியோ பாராலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் தங்கப் பதக்கம் ஆகும். தங்கப்பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் சேலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரரான வருண் சிங் பாடி வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இதையடுத்து ஒரே பிரிவில் இந்திய வீரர்கள் இருவர் இரு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். பாராலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெண்கலப் பதக்கத்துடன் பதக்கப்பட்டியலில் இந்தியா 24-வது இடத்தில் உள்ளது.

-ஆர்.மார்ஷல்.