இலங்கையில் போலீஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு நூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. தனிச்சிறப்பு மிக்க பயணம் என இந்நூற்றி ஐம்பதாவது ஆண்டினை போலீஸ் அமைச்சகம் கொண்டாடுகின்றது.
ஆனால், மக்களின் பண்பாடு, சம்பிரதாயம், சட்டம் ஒழுங்குகளுக்குப் புறம்பாக, போலீஸ் அதிகாரிகள் தங்களின் செல்போன்களில் பள்ளி, கல்லூரி மாணவிகளையும், பொதுமக்களையும் பொது இடங்களில் வைத்து புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்வது, பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புகைப்படம் மற்றும் வீடியோ பிடித்தலுக்கு ஒழுக்க விதிகள் உள்ளன. பெண்களை தொந்தரவு செய்யும் வகையில் புகைப்படம் பிடிப்பது சட்ட ரீதியிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கடுமையான குற்றச்செயல்களில் ஈடுப்படுபவர்களை புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவை வாயிலாக கண்காணிப்பதாக இருந்தால் கூட, அதற்காக போலீஸ் துறை மூலம் உத்தியோகபூர்வமாக புகைப்படக் கருவிகள் வாயிலாக வெளிப்படையாகச் செயற்படுவதே பொருத்தமானதாகும்.
ஆனால், போலீஸ் அதிகாரிகள் தங்கள் பயன்பாட்டில் வைத்திருக்கும் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது எந்த வகையில் நியாயம்?
இலங்கை போலீஸாரின் இதுப்போன்ற நடவடிக்கைகள் அந்நாட்டு மக்கள் மீது தொடுக்கப்படும் உளவியல் ரீதியான தாக்குதலாகவே அமைந்துள்ளது.
-வினித்.