கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவும், தமிழகத்தில் உள்ள கன்னடர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று, தமிழக முதலமைச்சர் ஜெ,ஜெயலலிதாவுக்கு, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் கடிதம் எழுதியுள்ளனர்.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வெளியானதால் பெங்களூரு, மைசூரு, மாண்டியா உள்பட மாநிலம் முழுவதும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.
கர்நாடகாவில் தமிழகர்களின் கடைகள், வாகனங்கள் குறிவைத்து தாக்கப்படுகிறது. பெங்களூருவில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மேலும் நகர் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மைசூரிலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே ராணுவத்தை அனுப்ப கர்நாடக அரசு கோரிக்கை விடுத்து உள்ளது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு இந்த விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதி உள்ளார். கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். தமிழக மக்கள் மற்றும் அவர்களுடைய உடமைகள் மீதான தாக்குதல்கள் வருத்தம் அளிக்கிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.
அதே போல் தமிழகத்தில் உள்ள கன்னடர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று, தமிழக முதலமைச்சர் ஜெ,ஜெயலலிதாவுக்கு, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com