செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 30 வரை தினமும் 3000 கன அடி நீரை தமிழகத்துக்கு கர்நாடக அரசு திறந்து விட வேண்டும்: காவிரி மேற்பார்வை குழு உத்தரவு.

cauveryThe Cauvery Supervisory Committee

செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 30 வரை 10 நாட்களுக்கு தினமும் 3000 கன அடி நீரை தமிழகத்துக்கு கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என, காவிரி மேற்பார்வை குழு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

காவிரியில் நீர் திறக்க உத்தரவிட காவிரி மேற்பார்வை குழுவுக்கு அதிகாரம் உள்ளது. நடுவர் மன்ற தீர்ப்பின்படியே காவிரி மேற்பார்வை குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரித்த உச்ச நீதி மன்றம் கடந்த 5–ந் தேதி, தமிழ்நாட்டுக்கு செப்டம்பர் 16–ந் தேதி வரை வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. மேலும், இப்பிரச்சினை தொடர்பாக மத்திய நீர்வளத்துறை செயலாளரை தமிழகமும், கர்நாடகமும் அணுகலாம் என்றும் கூறியது.

இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் திருத்தம் கோரும் மனுவை கர்நாடக அரசு கடந்த 11–ந் தேதி தாக்கல் செய்தது. அதில் 16–ந் தேதி வரை வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.

இதை ஏற்காத உச்ச நீதிமன்றம், 20–ந் தேதி வரை வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும். அதன் பின்னர், தண்ணீரை திறந்து விடுவது பற்றி காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின்படி காவிரி மேற்பார்வை குழு செயல்படவேண்டும் என்று,  கடந்த 12–ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இந்த சூழலில் காவிரி மேற்பார்வை குழுக்கூட்டம் டெல்லியில் கூடியது. நான்கு மாநில பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். தமிழகத்தை சேர்ந்த 3 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மேலும் 10 நாட்களுக்கு கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். தினமும் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும். 21 ந்தேதி முதல் 30 ந் தேதி வரை தண்ணீர் திறந்து  விட வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.

நீர்வளத்துறை செயலாளர் சசி சேகர்.

நீர்வளத்துறை செயலாளர் சசி சேகர்.

நீர்வளத்துறை செயலாளர் சசி சேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

நீர் இருப்பு விவரங்கள் குறித்து 4 மாநிலங்களும் இணையதளங்கள் மூலம் பகிர்ந்து கொண்டு வருகின்றன.  மழை அளவு நீர் இருப்பு, நீர் வரத்து, நீர் வெளியேற்றம்  ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன. இவை குறித்து தெரிந்து கொள்ள புதிய முறைகள் தேவை. கடந்த 15 நாட்கள் நீர் வரத்து குறித்து ஆய்வு செய்யபட்டது. தண்ணீர் திறந்து விட உத்தரவிட மேற்பார்வை குழுவுக்கு அதிகாரம் உள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவு படி தண்ணீர் திறக்க உத்தரவிடபட்டு உள்ளது. நடுவர் மன்ற தீர்ப்பின் படியே காவிரி மேற்பார்வை குழு உத்தரவிட்டு உள்ளது.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com