உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வருகிற அக்டோபர் மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படுகிறது. மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் இன்று மாலை 6.15 மணிக்கு மாநில தேர்தல் ஆணையத்தின் கூட்டரங்கில் பத்திரிகையாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிடுகிறார்.
தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 31 மாவட்ட பஞ்சாயத்துகள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 528 பேரூராட்சிகள், 12,524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.
அனைத்து மாநகராட்சிகளிலும் 919 வார்டுகள், நகராட்சிகளில் 3,613 வார்டுகள், பேரூராட்சிகளில் 8,288 வார்டுகள், மாவட்ட பஞ்சாயத்துகளில் 655 வார்டுகள், பஞ்சாயத்து யூனியன்களில் 6,471 வார்டுகள், கிராம பஞ்சாயத்து வார்டுகள் 99,324 என மொத்தம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 399 பதவிகள் உள்ளன.
இந்த முறை வார்டு கவுன்சிலர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு மட்டும் நேரடித் தேர்தல் நடக்கிறது.
மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் ஆகியோர் கவுன்சிலர்கள் மூலம் மறைமுகமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கான சட்ட திருத்த மசோதா சட்டசபையில் ஏற்கனவே நிறைவேறியது.
-ஆர்.அருண்கேசவன்.