காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்: காவிரி நீர் பங்கீடு ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உரை.

kavery meeting

Jayalalithaa7908PDIPR-P.R.No472-Hon_bleCM-SpeechonCauvery-Date29.9.20161  7908PDIPR-P.R.No472-Hon_bleCM-SpeechonCauvery-Date29.9.201627908PDIPR-P.R.No472-Hon_bleCM-SpeechonCauvery-Date29.9.20163
7908PDIPR-P.R.No472-Hon_bleCM-SpeechonCauvery-Date29.9.20164

டெல்லியில் காவிரி நீர் பங்கீடு ஆலோசனை கூட்டம் மத்திய மந்திரி உமா பாரதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தமிழகம் சார்பில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உரையை தலைமை செயலாளர் ராம மோகன் ராவ் வாசித்தார். அதில் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கூறி இருப்பதாவது:- 

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் உள்ள பிரச்சினை பற்றி தமிழகம்-கர்நாடகா ஆகிய இரு மாநில முதல்வர்களும் சந்தித்துப் பேச வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியதன் பேரில் இந்த கூட்டம் நடக்கிறது. நான் மருத்துவமனையில் இருப்பதால் இந்த கூட்டத் தில் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே, தமிழக பொதுப்பணி துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை அனுப்பியுள்ளேன்.

சுப்ரீம் கோர்ட்டின் ஒவ்வொரு உத்தரவையும் ஏற்று மதித்து நடக்கும் தமிழக அரசு, காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறது. ஆனால், அதற்கு மாறாக கர்நாடக அரசு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை தொடர்ச்சியாக அவமரியாதை செய்தும், திட்டமிட்டு ஏற்க மறுத்து விட்டும் இந்த கூட்டத்துக்கு வந்துள்ளது. 

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் ஆணையத்தின்படி 31-08-2016 வரை கர்நாடகா 60.983 டி.எம்.சி. தண்ணீரை தரவில்லை. இதனால் தமிழ் நாட்டில் ஒரு போக சம்பா பயிரைக் கூட காப்பாற்ற முடியாத நிலை உள்ளது. இதைத் தொடர்ந்தே தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகியது. 

சுப்ரீம் கோர்ட்டு 05-09-2016 அன்று வெளியிட்ட முதல் தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு தினமும் 10 நாட்களுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. பிறகு 12-09-2016 வரை 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவில் திருத்தம் செய்தது.

ஆனால் கர்நாடகா காவிரியில் போதுமான அளவுக்கு தண்ணீர் திறந்து விட தவறிவிட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு கர்நாடகா அரசு பணியவில்லை. 

இதையடுத்து 20-09-2016 அன்று சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்ட உத்தரவில் 27-09-2016 வரை தினமும் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் வகையில் கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுத்து விட்டது. 

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கர்நாடகா மாநில அரசு தொடர்ந்து மீறுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளை கர்நாடகா ஏற்றுக் கொள்ளவே இல்லை. 

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நடந்து கொள்ளாத கர்நாடகா, அதற்கு பதில் கர்நாடகாவில் சமூக விரோதிகள் நடத்திய சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுக்கு அனுமதித்தது. காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிடும் போதெல்லாம் அங்கு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் அரங்கேற்றப்படுவது துரதிர்ஷ்ட வசமானது. தாக்கப்பட்ட தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி ஏழை கூலி தொழிலாளர்கள் ஆவார்கள். 

பெங்களூரில் உள்ள தமிழர்களின் சொத்துக்கள், உடமைகள் அடித்து, நொறுக்கி, தீக்கிரையாக்கப் பட்டு சூறையாடப்பட்டன. தமிழக பதிவு எண் கொண்ட ஏராளமான வாகனங்கள் தீ வைத்தும், கல் வீசியும் நாசப்படுத்தப்பட்டன. 

கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் உயிர் வாழ பயப்படும்படி பீதி ஏற்படுத்தப்பட்டது. தமிழர்கள் மீது பல இடங்களில் ஈவு, இரக்கமின்றி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கர்நாடகா அரசு அவற்றை தடுத்து நிறுத்த எந்த வலுவான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இத்தகைய சம்பவங்கள் பல்வேறு அரசியல் அமைப்புகள், மூத்த தலைவர்களால் தூண்டி விடப்பட்டதாக நாங்கள் நம்புவதற்கான ஆதாரங்கள் உள்ளன. 

அதே சமயத்தில் தமிழ் நாட்டில் எனது உத்தரவின் பேரில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தமிழ் நாட்டில் கர்நாடகாவை சேர்ந்த யார் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தப்படவில்லை.

கர்நாடகாவை சேர்ந்த யாருடைய சொத்துக்களும் தமிழ்நாட்டில் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட வில்லை. சில சிறு எதிர்ப்பு  நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்களும் கைது செய்யப்பட்டனர். 

காவிரியில் தண்ணீர் பெற தமிழக அரசு 1991-ம் ஆண்டு முதல் நீண்ட காலமாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. அதன் காரணமாக 25-06-1991 அன்று காவிரி நடுவர் மன்றம் மூலம் இடைக்கால உத்தரவைப் பெற்றது. ஆனால் அந்த ஆணையை கர்நாடகா மதிக்கவில்லை. தமிழ்நாடு இது தொடர்பாக காவிரி தண்ணீர் உரிமை பற்றி பேசும் போதெல்லாம் அங்குள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.  

கர்நாடகா மாநில அரசு இதுவரை காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அங்கீகரிக்கவில்லை. தமிழ் நாட்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற உத்தரவை கர்நாடகா இதுவரை செயல்படுத்தவில்லை. இதுவரை கர்நாடகா அணைகள் நிரம்பும் காலங்கள் தவிர மற்ற சமயங்களில் உரிய பங்கு தண்ணீர் தரப்படவில்லை. 2001-ம் ஆண்டு நான் முதல்வராக பதவி ஏற்றதும், 19-02-2013 அன்று காவிரி நடுவர் மன்ற உத்தரவு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். 

இது தொடர்பாக நான் மீண்டும், மீண்டும் மத்திய அரசை வலியுறுத்தி வந்தேன். அதன் பயனாக காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களில் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு 20-09-2016 அன்று உத்தரவிட்டது. 

காவிரி நதி நீர்த்தடத்தில் கடைமடை பகுதியாக தமிழகம் உள்ளது. கர்நாடகாவின் திட்டமிட்ட செயல்களால் தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைப்பதில்லை. 

தமிழகம் விடுத்த கோரிக்கைகளை கர்நாடகா காது கொடுத்து கேட்காததால் சுப்ரீம் கோர்ட்டை நாடினோம். இதைத் தொடர்ந்தே காவிரியில் தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். எனவே, மத்திய அரசு 4 வார கால அவகாசத்துக்கு காத்து இருக்காமல் உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். தமிழ் நாட்டுக்கு தற்போது சம்பா பயிர் பாதுகாப்புக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே சுப்ரீம் கோர்ட்டு 05-09-2016, 12-09-2016, 20-09-2016, 27-09-2016 ஆகிய தேதிகளில் வெளியிட்ட உத்தரவுக்கு ஏற்ப காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் கர்நாடகா அரசு 26-09-2016 வரை தர வேண்டிய 764 டி.எம்.சி தண்ணீரை உடனே காவிரியில் திறந்து விட வேண்டும். இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கூறியுள்ளார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com