தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு கடந்த 22-ம் தேதி இரவு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவ்வப்போது அவரது உடல்நலம் பற்றிய தகவல்களை மருத்துவமனை செய்திக் குறிப்பில் வெளியிட்டுவந்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்தும் சிகிச்சை பற்றியும் கேட்டறிவதற்காக தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்தியாசாகர் ராவ் இன்று (01.10.2016) மாலை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தார்.
இதையொட்டி மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுமார் மாலை 6.40 மணியளவில் அப்பல்லோ மருத்துவமனை வந்த ஆளுநர் (பொறுப்பு) வித்தியாசாகர் ராவ் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் முதல்வரின் உடல்நலம் மற்றும் சிகிச்சை அளிக்கப்படும் விவரங்கள் குறித்து அப்பல்லோ மருத்துவர்களிடன் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: – முதவர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் வார்டுக்கு சென்று பார்த்தேன். அவருக்கு மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். முதல்வர் ஜெ.ஜெயலலிதா நலமுடன் உள்ளார். சிறப்பான முறையில் சிகிச்ச்சை அளித்து வரும் மருத்துவர்களுக்கு நன்றி. அவர் விரைவில் குணமடைந்து வர வாழ்த்துகிறேன் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-கே.பி.சுகுமார்.