கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நரேந்திரா, மீனா தம்பதியர், இவர்களுக்கு 1992–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26- ந் தேதி திருமணமானது. இவர்களுக்கு 1993–ம் ஆண்டு நவம்பர் மாதம் 13- ந் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ரஞ்சிதா என்று பெயரிட்டனர்.
குடும்பத்தில் நரேந்திரா மட்டுமே சம்பாதித்து வந்தார். இதன் காரணமாக அவர், தனது பெற்றோரை தன்னுடன் வைத்து பராமரித்து வந்தார். ஆனால், இது மனைவி மீனாவுக்கு பிடிக்கவில்லை. கணவரை, அவரது பெற்றோரிடமிருந்து பிரித்து தனியாக அழைத்துச் சென்று விட வேண்டும் என்று மீனா எண்ணினார். ஆனால், அதற்கு அவரது கணவர் நரேந்திரா சம்மதிக்கவில்லை.
இந்நிலையில், மனைவி மீனாவின் நடவடிக்கை, நரேந்திராவுக்கு மனதளவில் கொடுமையாக அமைந்தது. அவர் தன் பெற்றோரை பிரிய விரும்பாமல், மனைவியை பிரிந்துவிட முடிவு எடுத்தார்.
இதையடுத்து அவர் விவாகரத்து வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனைவி மீனாவிடம் இருந்து விவாகரத்து வழங்கி அவருக்கு தீர்ப்பு அளித்தது.
ஆனால், அதை எதிர்த்து அவரது மனைவி மீனா கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மேல்–முறையீடு செய்தார். அங்கு விவாகரத்து வழங்கி கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ரத்தானது.
ஒரு மனைவி தனது கணவரின் வருமானம் தனக்கு மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும், அவரது முழுக் குடும்பத்தினருக்கும் அல்ல என்று கருதுவது சட்டப்பூர்வமான எதிர்பார்ப்பு என்று அத்தீர்ப்பில் கூறப்பட்டது.
கர்நாடகா உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நரேந்திரா, உச்ச நீதி மன்றத்தில் மேல்–முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் அனில் ஆர் தவே, எல்.நாகேஷ்வரராவ் ஆகியோர் விசாரித்தனர்.
விசாரணை முடிவில், தனது வயதான பெற்றோருடன் இருந்து அவர்களை பராமரிக்கிற பக்தியுள்ள கடமையை பறிக்கிற கொடுமையை செய்ய முயன்ற மனைவியை ஒரு இந்து மகன் விவாகரத்து செய்யலாம் என, 06.10.2016 அன்று நீதிபதிகள் அனில் ஆர் தவே, எல். நாகேஷ்வரராவ் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர்.
தீர்ப்பில் கூறி இருப்பதாவது:–
பெற்றோரால் வளர்த்து, கல்வி புகட்டி, ஆளாக்கப்படுகிற மகனுக்கு, வயதான, வருமானம் இல்லாத அல்லது மிகக்குறைந்த வருமானமே உடைய தனது பெற்றோரை உடன்வைத்து பராமரிக்கிற தார்மீக கடமையும், சட்டப்பூர்வ கடமையும் இருக்கிறது.
இந்தியாவில் பொதுவாக மக்கள் மேற்கத்திய சிந்தனைகளை பின்பற்றுவதில்லை. அங்குதான் திருமணமானதும் அல்லது வயது வந்ததும் மகன் குடும்பத்தை விட்டு பிரிந்து விடுகிறார்.
வழக்கமாக மனைவியானவள், கணவன் குடும்பத்தாருடன் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அவள் குடும்பத்தின் ஒருங்கிணைந்த பகுதி ஆகிறாள். எந்த ஒரு வலுவான காரணமும் இன்றி, குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து கணவர் தன்னுடன் மட்டுமே வாழ வேண்டும் என்று அவள் கட்டாயப்படுத்துவதில்லை.
திருமணமாகிவிட்டால், மனைவியின் தூண்டுதலின் பேரில் பெற்றோரை விட்டு மகன் பிரிந்து விடுவது என்பது இந்து குடும்பத்தில் வழக்கமாக நடைபெறுகிற ஒன்று அல்ல. அதிலும் குறிப்பாக குடும்பத்தில் சம்பாதிக்கிற ஒரே நபராக மகன் இருக்கிற பட்சத்தில், அப்படி செய்வதில்லை.
இவ்வாறு உச்ச நீதி மன்ற நீதிபதிகள் அனில் ஆர் தவே, எல். நாகேஷ்வரராவ் ஆகியோர் தீர்ப்பில் கூறி உள்ளனர்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com