திருவண்ணாமலை மாவட்டம், போளுர் வட்டம், படவேடு அருகே பாலைமதி, மேல் முருவமந்தை, கீழ்முருவமந்தை, நீர்தும்பை ஆகிய மலை பகுதி கிராமங்களில், பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாமை, திணை, கேழ்வரகு, எள்ளு, கொள்ளு, புளி, மிளகாய்…ஆகிய அத்யாவாசியபொருட்கள் விளைவிக்கப்படுகின்றன.மலைத்தேன் சேகரிப்பும் இங்கு நடக்கிறது.
இங்கு விளையும் தானியங்களுக்கும், மலைப் பொருட்களுக்கும், அரசு கொள்முதல் நிலையம் இல்லை. இதனால், இடைத்தரகர்கள்தான் லாபம் அடைகிறார்கள். உழைக்கும் பழங்குடியின மக்களுக்கு விரக்திதான் மிச்சம். இதற்கு முக்கிய காரணம், இக்கிராமங்களுக்கு அடிப்படை சாலை வசதி இல்லாததுதான்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை. சுத்தமான குடிநீரும் இல்லை. இப்பகுதியில் ஆரம்ப பள்ளி இருக்கிறது. ஆனால், வாகனத்தில் வந்து செல்வதற்கு சாலை வசதி இல்லாததால், மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 30.கி.மீ. தூரம் மலை மீது நடந்தே வர வேண்டிய அவலம் இருப்பதால், ஆசிரியர் பள்ளிக்கு வந்து சேருவதற்கு மதியம் ஆகிவிடுகிறது. பாவம், அந்த ஆசிரியர் என்ன செய்வார்? கொஞ்சம் நேரம் இளைப்பாறி விட்டு மறுபடியும் அடிவாரத்தை நோக்கி நடக்க துவங்கி விடுவார்.
அத்தியாவசிய உணவு பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்குவதற்கு அரசின் நியாய விலை கடைகளுக்கு மலையில் இருந்து 30.கி.மீ. தூரம் இறங்கி அடிவாரத்தில் படவேடு அருகே உள்ள அர்ஜினாபுரம், பெருமாள்பேட்டைக்கு வர வேண்டியுள்ளது. வாங்கிய பொருட்களை மோட்டார் சைக்களில் எடுத்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் கரடு, முரடான மலை பாதையில் தலைச்சுமையாகதான் மக்கள் தூக்கிச் செல்கின்றனர்.
இதைவிட ஆபத்தான பிரச்சனை என்னவென்றால், கர்ப்பிணி பெண்கள் பிரசவ வலியின் போது, கொம்பில் போர்வையை கொண்டு டோலி கட்டி தான் தூக்கி செல்ல வேண்டும். 108- ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தாலும் எந்த பயனுமில்லை. ஏனென்றால், நடந்து செல்வதற்கே பாதை வசதி இல்லாதபோது, ஆம்புலன்ஸ் மட்டும் எப்படி மலை மீது வரும்?
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தும் மலை அடிவாரத்தோடே முடிந்து போகிறது. பழங்குடியின மக்களின் வாக்குகளை பெறுவதற்கு, தேர்தல் நேரத்தில் கழுதை மற்றும் குதிரைகள் மீது வாக்கு இயந்திரங்களை ஏற்றிச் செல்லும் அதிகாரிகள், தேர்தல் முடிந்தவுடன் அந்த மக்களை மறந்து விடுவது எந்த வகையில் நியாயம்? இது துரோகமில்லையா?
சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
செவ்வாய்க்கும், சந்திரனுக்கும் செயற்கை கோளை அனுப்பி ஆய்வு செய்ய தெரிந்த நமக்கு, பழங்குடியின மக்களின் உணர்வுகளையும், அவர்களது அடிப்படை தேவைகளையும் புரிந்து கொள்ளாமல் இருப்பது, அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
-மு.ராமராஜ்.