உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிட்டது.
இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளில் பழங்குடியினருக்கு முறையான இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றும், அது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த அக்டோபர் 4-இல் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், புதிதாக அறிவிப்பு வெளியிட்டு, டிசம்பர் மாத இறுதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு, தமிழக அரசு மற்றும் திமுக தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணை ஒத்தி வைத்தது 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு.
இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என உயர்நீதிமன்றத்தில் பலர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி என்.கிருபாகரன் முன்பு 22.11.2016 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணைய தரப்பு வழக்குரைஞரை பார்த்து தொடர் கேள்விகளை நீதிபதி எழுப்பினார்.
மாநில தேர்தல் ஆணைய மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கவில்லை.
அப்படியிருக்கும்போது, தேர்தலை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஏன் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளிக்க கால அவகாசம் கோரியதையடுத்து, நவம்பர் 28-ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com