சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்தோ அல்லது அவர் மரணம் குறித்தோ இதுவரை ஒரு வார்த்தைக்கூட பேசாமல் தொடர்ந்து மௌனம் சாதித்து வரும் சசிகலா, மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோதி, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு சசிகலா எழுதியுள்ள கடிதத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்றமைக்கு நன்றி. தாங்கள் தில்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டு, மீண்டும் தில்லி திரும்பிய பின்னரும், பயணத்தை கைவிடாமல், வேறொரு விமானம் மூலம் சென்னை வந்து அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதோடு, எனக்கு ஆறுதல் அளித்தமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சென்னை வந்து, எங்களது துக்கத்தில் பங்கேற்றீர்கள். இறுதி அஞ்சலியின் போது தாங்கள் கூறிய ஆறுதல் வார்த்தைகள், தமிழக மக்களுக்கும் எனக்கும் ஆறுதலாக இருந்தது.
சென்னை வந்து, இறுதிச் சடங்கில் பங்கேற்றமைக்கும், உங்களது இரங்கலை தமிழக மக்களுக்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் தெரிவித்துக் கொண்டமைக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுலுக்கு எழுதிய கடிதத்தில், சென்னைக்கு வந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற ராகுலுக்கு நன்றி. உங்களது இரங்கல் வார்த்தைகள் எனக்கு மிகுந்த ஆறுதலை அளித்தது என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.