மேற்காணும் அறிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் குறிப்பிட்டு இருக்கும் கருத்துக்கள் மற்றும் புள்ளி விபரங்கள் அனைத்தும் நூறு சதவீதம் உண்மை.
தமிழகத்தில் உள்ள ஆறுகள் அனைத்தும் பொதுப் பணித்துறையினரின் பராமரிப்பில் தற்போது இல்லை. அவைகள் அனைத்தும் மணல் கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகிறது.
குண்டர்களையும், கூலிப்படையினரையும், வேலைக்கு அமர்த்தி உள்ளூர் கட்டப்பஞ்சாயத்துக்காரர்களை கைக்குள் போட்டுக்கொண்டு, காவல்துறையினரின் பாதுகாப்போடு மணல் கொள்ளை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
நதிக்கரை ஓரத்தில் வசிக்கும் கிராம மக்கள் கூட ஆற்று படுகைகளில் சுதந்திரமாக நடமாடுவதற்கு அஞ்சுகின்றனர். அந்த அளவிற்கு மணல் குவாரி கூலிப்படையினரின் அட்டகாசம் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கும் உரிய மாமுல் வழங்கப்படுவதால் மணல் கொள்ளை குறித்து வரும் புகார்கள் அனைத்தும் புஷ்வாணமாகிவிடுகிறது.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருவளர் சோலை மற்றும் பனையபுரம் வழியாக கல்லணைச் செல்லும் சாலையில் காவிரி ஆற்றில் 10-க்கும் மேற்பட்ட இயந்திரங்களை கொண்டு இரவு, பகலாக மணல் கொள்ளை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
தற்போது சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்களுக்கு சொந்தமான வீடுகளிலும், நிறுவனங்களிலும், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதால், தற்போது மணல் அள்ளுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மணல் குவாரியை சுற்றிலும் அப்பகுதி மக்களை நடமாடவிடாமல் தொடர்ந்து இரவு பகலாக கூலிப்படையினர் காவல் காத்து வருகின்றனர்.
இந்த மணல் மணல் குவாரிக்கு 7 கிலோ மீட்டர் தூரத்தில்தான் கரிகாலன் கட்டிய கல்லணை இருக்கிறது. காவிரி ஆற்றில் சுமார் 15 அடி ஆழத்திற்கு கீழ் மணல் சுரண்டப்படுவதால், அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும், எதிர்காலத்தில் கல்லணைக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
உள்ளூர் வாசிகள் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தி வழக்கு பதிவு செய்யும் தமிழக காவல்துறையினர், இயந்திரங்களை கொண்டு மணல் அள்ளுவதை வேடிக்கைப் பார்ப்பது எந்த வகையில் நியாயம்?
எனவே, இயந்திரங்களை கொண்டு ஆறுகளில் மணல் அள்ளுவதையும், அதை வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்வதையும், தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். இல்லையென்றால், தமிழகத்தில் உள்ள ஆறுகள் அனைத்தும் பாலைவனமாக மாறிவிடும்.
-டாக்டர்.துரை பெஞ்சமின்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்.
படங்கள்: உள்ளாட்சித்தகவல் நிருபர்கள் குழு.
படங்கள்: உள்ளாட்சித்தகவல் நிருபர்கள் குழு.