மத்திய பிரதேசம் மாநிலம், சொபூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் விவசாயி ஒருவர் பணம் எடுத்துள்ளார். ஆனால், அவர் எடுத்த ரூ. 2000 நோட்டில் மகாத்மா காந்தியின் படம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே, அவர் இது குறித்து வங்கியில் புகார் அளித்துள்ளார்.
எஸ்பிஐ வங்கியின் அதிகாரி ஆர்.கே.ஜெயின் கூறுகையில், “இது கள்ள நோட்டு கிடையாது. இந்த நோட்டில் அச்சு பிழை ஏற்பட்டுள்ளது. மேலும், இது குறித்து ரிசர்வ் வங்கியிடம் புகார் அளித்துள்ளோம் என்றார்.
இது கவனக் குறைவு அல்ல; தேசிய அவமானம். இதற்கு காரணமானவர்களை கண்டு பிடித்து முதலில் தூக்கில் போட வேண்டும்.
ஏனென்றால், திரை அரங்கத்தில் கூட தேசிய கீதத்தை இசைக்க செய்து நமது தேசப் பக்தியை வெளிப்படுத்தி வரும் நாம், ரூபாய் நோட்டுகளில் தேசத் தலைவர் உருவம் இல்லாமல் வெளியிடுவது எவ்வளவு பெரிய அவமானம்? இது எவ்வளவு பெரிய குற்றம்?
ரூபாய் நோட்டில் அச்சு பிழை ஏற்படுவது சகசமான ஒன்றுதான். ஆனால், அதை உன்னிப்பாக கண்காணித்து தடுப்பதற்கோ (அல்லது) பிழைத் திருத்தம் செய்து வெளியிடுவதற்கோ வக்கற்ற அதிகாரிகளுக்கு மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வழங்குகிறோம் என்பதை நினைக்கும் போது தான் வருத்தமாக இருக்கிறது.
தினசரி படித்தவுடன் கிழித்து போடும் செய்தித்தாள்களைக் கூட, அதை வெளிடுவதற்கு முன்பு பலமுறை பரிசோதித்த பிறகு தான் அச்சடித்து நாடு முழுவதும் விநியோகம் செய்கிறார்கள். அதில் ஏதாவது சிறிய தவறுகள் இருந்தாலும், அடுத்த நாள் அதற்காக வருத்தம் தெரிவித்து வாசகர்களிடம் மன்னிப்பு கேட்கிறார்கள்.
ஆனால், மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள், ஏதோ அவர்கள் புண்ணியத்தில்தான் இந்த இந்திய தேசமே இயங்குவதைப் போல இறுமாப்போடு செயல்பட்டு வருகின்றனர். இது இந்த நாட்டிற்கு நல்லதல்ல.
கள்ள நோட்டை ஒழிப்பதாகவும், கருப்பு பணத்தை பிடிப்பதாகவும் மத்திய அரசாங்கம் மார்த்தட்டி வருகிறது. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளும், வருமானவரி துறையை சேர்ந்த அதிகாரிகளும் மேற்படி குற்றங்களுக்கும், குற்றவாளிகளுக்கும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.
அரசு பணியாளர்களும், அதிகாரிகளும் ஒழுக்கமாகவும். நேர்மையாகவும் இல்லாத வரை இந்த தேசத்திற்கு தொடர்ந்து அவமானங்கள் நேர்ந்து கொண்டுதான் இருக்கும்.