அம்மா அவர்களின் தியாகங்களுக்கு ஒப்பே கிடையாது; நல்ல முடிவை நான் விரைவில் அறிவிப்பேன்: தீபா!

deepa m

மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இன்று மாலை 5 மணியளவில், அவரது வீட்டு வாயிலில் காத்திருந்த தொண்டர்களிடையே பேசினார்.

அப்போது, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்து சிறிது காலம்தான் ஆகியுள்ளது. எனவே, அதில் இருந்து வெளியே வர வேண்டும். சிறிது காலம் அமைதியோடு பொறுமை காத்திட வேண்டும். இந்த நேரத்தில் பொறுமை காத்திடுவது மிகவும் அவசியம்.

ஏழை எளியோருக்காக குரல் கொடுத்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை அனைவரும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதே எனது ஆசை. அன்று முதல் அவர் நல்லாசிகளுடன் அனைவரும் செயல்படுவோம்.

‘மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர வெறுத்திடுமா; மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா’ என்று ஏழைகளுக்காக குரல் கொடுத்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். எனவே, புரட்சித் தலைவர் வழியில் அனைவரும் செயல்படுவோம்.

அம்மா அவர்களின் தியாகங்களுக்கு ஒப்பே கிடையாது. ஒப்பற்ற அவரது பெயரையும், புகழையும் நாம் அனைவரும் நிலை நாட்ட வேண்டும்.

நல்ல முடிவை உங்கள் அனைவருக்காகவும் நான் விரைவில் அறிவிப்பேன். நல்ல பாதையில் நாளைய சமுதாயத்தின் வளர்ச்சியையும், எதிர்காலத்தையும் மனதில் வைத்துக் கொண்டு அதைப் பின்பற்றி எனது முடிவுகள் இருக்கும்.

இதய தெய்வம் எம்ஜிஆர்-ரையும், ஜெயலலிதாவையும் வணங்கி விடை பெறுகிறேன். ‘உங்களுக்காக நான் பணியாற்றக் காத்திருக்கிறேன்’ என்று கூறி, தனது ஆதரவாளர்களை நோக்கி வணங்கி விடைபெற்றுக் கொண்டார்.

 -கே.பி.சுகுமார்.