தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் அதன் தலைவர் சுந்தரராஜன் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.
அதேபோல், பாலமேடு ஜல்லிக்கட்டு விழா குழுவினர் அதன் தலைவர் கா.பா.செல்லத்துரை தலைமையிலும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் அதன் தலைவர் ஏ.கே.கண்ணன் தலைமையிலும் முதல்வரை தனித்தனியே சந்தித்தனர்.
பின்னர், நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பிப்ரவரி 10-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அதன் விழாக்குழுவினர் தெரிவித்தனர். அதேபோல், பாலமேட்டில் பிப்ரவரி 9-ம் தேதியும், அவனியாபுரத்தில் பிப்ரவரி 5-ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அந்தந்த விழாக்குழுவினர் தனித்தனியே அறிவித்தனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வசதியாக தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இது உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-கே.பி.சுகுமார்.