திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழமுல்லக்குடி ஊராட்சி வளன் நகர் கிராமத்தில் குடி நீர் இன்றி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மின் மோட்டார் சுட்சு பழுதடைந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை சரி செய்யப்படவில்லை. மேலும், குடிநீர் குழாய் அடியில் சாக்கடை நீர் நிரந்தரமாக தேங்கியிருப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
கீழமுல்லக்குடி ஊராட்சியில் உள்ள குடி நீர் தொட்டிகள் அனைத்தும் முறையாக சுத்தம் செய்வது இல்லை. குடி நீர் தொட்டி மூடிகள் திறந்த நிலையில் உள்ளதால் அதில் புழு பூச்சிகள் செத்து மிதக்கின்றன.
மேலும், பல இடங்களில் தெரு விளக்குகள் எரியவில்லை. இப்பகுதி முழுவதும் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் திரிவதால் பொதுமக்களை கடித்து விடுகிறது.
இதுக்குறித்து திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர், அம்மா அழைப்பு மையம் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகிய இடங்களுக்கு பொதுமக்களின் சார்பில் பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்திலேயே பொதுமக்களிடமிருந்து அதிக புகார்கள் வரும் பகுதியாக கீழமுல்லக்குடி ஊராட்சி உருவெடுத்துள்ளது. ஊராட்சியின் நிதி அதிகாரிகளால் சுரண்டப்படுகிறது. இதை கண்காணித்து போர் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிட்டால், இங்கு மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும்.
–கே.பி.சுகுமார்.