சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அமர்ந்து மெளன அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் திடீர் தியானம் செய்ய காரணம் என்ன என்பது குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த என் மனசாட்சி உந்தப்பட்டதனால் நான் இங்கு வந்து சேர்ந்தேன். சில உண்மை விவரங்களை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று ஜெயலலிதாவின் ஆன்மா என்னை உந்துதல் படுத்தியது அதன் விளைவாக நான் இங்கு வந்து நிற்கிறேன்.
அம்மா அவர்கள் சுமார் 70 தினங்கள் உடல் நிலை நோய்வாய்பற்று இருந்த நிலையில் கட்சியையும் ஆட்சியையும் கட்டிக்காக்க வேண்டிய சூழல் உள்ளது என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள். அவர்கள் சொன்னதை நான் கேட்டு அழுது கண்ணீர் வடித்தேன்.
பின்னர் கழகத்தின் பொதுச்செயலாளராக மதுசூதனன் அவர்களை அமர்த்த வேண்டும் என்று சொன்னார்கள் அதே சமயத்தில் முதல்வர் பொறுப்பில் என்னை அமரச்சொன்னார்கள். நான் அதை ஏற்க மறுத்தேன். வேறு ஒருவரை அமரவைத்தால் கட்சிக்கும், ஆட்சிக்கும் பங்கம் ஏற்படும் என்று கூறியதால் நான் மீண்டும் அந்த பதவியை ஏற்றுக் கொண்டேன்.
அதன் பிறகு சுகாதார துறை அமைச்சர் என்னிடம் வந்து கேட்டார், திவாகர் உங்களிடம் கேட்க சொன்னார். கழகத்தின் பொதுச் செயலாளராக தன் அக்காவை ஆக்க வேண்டும். இல்லையென்றால் நான் அவர்களை ஊருக்கு அழைத்து செல்கிறேன் என்று சொன்னார்கள். அப்போது மூத்த அமைச்சர்களிடம் கருத்து கேட்டேன்.
அவர்களும் அந்த கருத்துக்கு உடன்பட்டதால் சசிகலா அவர்களை பொதுச் செயலாளராக ஆக்கினோம். இதற்கிடையில் வந்த வர்தா புயல் நிர்வாரணப் பணிகளை நான் செவ்வனே செய்து முடித்தேன். அது அவர்களுக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தியது. ஆனால் நான் ஜெயலலிதாவின் நற்பெயரை காப்பாற்ற வேண்டும் என்றே அனைத்தும் செய்தேன். இதற்க்கு பிறகு ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டம் மெரினாவில் நடந்தது. சட்ட ஒழுங்குக்கு பங்கம் ஏற்பட்டமல் இருக்க வேண்டும் என்று கருதி பிரதமரை சந்தித்து அவரச சட்டம் கொண்டுவர கேட்டேன்.
ஆனால் பிரதமர் மாநிலத்தில் அவசரச் சட்டம் கொண்டு வர ஆலோசனை கூறினார். அதன்படி கொண்டுவரப்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் நான் எனது நடவடிக்கையை சரியாக மேற்கொண்டேன். அந்த நேரத்தில் வருவாய்துறை அமைச்சர் ஆர்.வி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து சசிகலா முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று பேட்டி கொடுத்தார். என் அமைச்சரவையில் இருக்கின்ற ஒருவரே வேறொருவரை முதல்வராக ஆக்க வேண்டும் என்று சொன்னால் அது தேவையில்லாமல் ஒரு பிரச்னை உருவாகுமே என்று கேட்ட போது அவரை கண்டித்துவிட்டோம் இனியாரும் அப்படி பேச மாட்டார்கள் என்று கூறினார்கள்.
ஆனால் அதன் பிறகும் செல்லூர், ராஜூ செங்கோட்டையன் போன்றவர்களும் அதே கருத்தை சொன்னார்கள், அதன் பிறகு என்னை ஏன் இப்படி அவமானப்படுத்த வேண்டும் என்று கேட்டேன். நாட்டு மக்களும், தொண்டர்களும் கட்சியின் மீது மிகவும் வருத்ததிலும் அதிருப்தியிலும் இருக்கிறார்கள் என்றேன்.
இந்த சூழ்நிலையில்தான் எனக்கு தகவல் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி கையெழுத்து பெற்றுக் கொண்டிருப்பதாக சொன்னார்கள். நான் எண்ணூர் எண்ணெய் கசிவு விவகாரத்துக்கான பணியில் இருந்தேன். அப்போது என்னை அழைத்து சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
அதற்கு என்ன அவசியம் இப்போது வந்தது என்று கேட்டேன். கட்சியின் கட்டுப்பாட்டை காப்பாற்ற வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள். அதை மாண்புமிகு ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு தெரியப்படுத்தவே இங்கு வந்தேன். நான் தன்னந்தனியாக தனித்து நின்று போராடவும் தயாராக இருக்கிறேன். இதில் நான் உறுதியாக இருப்பேன். மக்களும் தொண்டர்களும் விரும்பினால் ராஜினாமாவை திரும்ப பெறுவேன்.
-கே.பி.சுகுமார்.