குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம், திமுக செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அளித்த புகார் மனுவின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
மேதகு குடியரசு தலைவர் அவர்களுக்கு, வணக்கம்.
தமிழக சட்டமன்றத்தில் மிகப்பெரிய எதிர் கட்சியாக திகழ்ந்து வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தமிழக ஆளுநர் அழைப்பின் பேரில் பதவியேற்றுக் கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையிலான அதிமுக அரசு தமிழக சட்டமன்றத்தில் 18.2.2017 அன்று கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது நடைபெற்ற ஜனநாயகத்திற்கும், அரசியல் சட்டத்திற்கும் விரோதமான செயல்களை தங்களது மேலான கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறோம். மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆட்சி அமைக்க விடுத்த அழைப்பின் பேரில் சட்டமன்றத்தில் நடைபெற்ற அன்றைய நிகழ்வுகள் இந்திய திருநாட்டின் அரசியலமைப்பு மீது நம்பிக்கை கொண்டுள்ள தமிழக மக்களின் மனசாட்சிக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக சட்டமன்றத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 என்பதை தெரிவிக்க விரும்புகிறோம். ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள பலம் என்று பார்த்தால் ஆளும் கட்சியின் தரப்பில் உள்ள அதிமுகவுக்கு (சசிகலா வழிநடத்தும் அணி) – 122; ஓ.பன்னீர்செல்வம் வழிநடத்தும் அதிமுக அணிக்கு – 11; அவைக்கு வராமல் இருந்தவர் – 1; காலியாக உள்ள இடம் – 1 ஆகும். அதேபோல எதிர் கட்சிகளின் சார்பில், திமுகவுக்கு – 89; காங்கிரஸ் – 8; இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1 என்று உறுப்பினர்களின் எண்ணிக்கை அடங்கும்.
முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், நிர்பந்தத்தாலும், வலுக்கட்டாயமாகவும் 5.2.2017 அன்று அவரது பதவியை ராஜினாமா செய்த நிலையில், வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் அறிவிக்க இருந்த நிலையில், அந்த வழக்கின் குற்றவாளியாக இருந்த திருமதி. வி.கே.சசிகலாவை சட்டமன்ற கட்சி தலைவராக கடந்த 06-02-2017 அன்று தேர்வு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, அவரை ஆதரித்த சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னையில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கூவத்தூர் என்ற பகுதியில் இருக்கும் கடற்கரை விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டு, அவர்கள் சுதந்திரமாக நடமாடும் உரிமை பறிக்கப்பட்டது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில், திருமதி சசிகலா உள்ளிட்டோருக்கு 4 வருட சிறை தண்டனை மற்றும் 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து பெங்களூர் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது.
அதன்படி, திருமதி வி.கே.சசிகலா தற்போது பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு, 4 வருட சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். அவருக்கான சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட உடன், அவர்களது அரசியல் கட்சியின் சார்பில் வேறு ஒருவரை முதல்வராக தேர்வு செய்ய, விடுதியில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த எம்.எல்.ஏ.க்கள் சட்டவிரோதமாகவும், முறைகேடான வகையில் கட்டாயப்படுத்தப் பட்டனர். அதன் விளைவாக திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் ஆட்சி அமைக்கும் உரிமை கோரி தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை வழங்கினார்.
தமிழக ஆளுநர் அவர்கள், 16.2.2017 அன்று திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களை முதல்வராக நியமித்து, அன்றிலிருந்து 15 நாட்களுக்குள் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று உத்தரவிட்டார். எம்.எல்.ஏ–க்களை ஓரிடத்தில் கூட்டமாக நீண்ட நாட்கள் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதன் சிரமத்தை உணர்ந்தும், தமிழகம் முழுவதும் எம்.எல்.ஏ–க்களை விடுவிக்கக் கோரி மக்களின் தீவிர போராட்டத்தின் விளைவாகவும் புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர் இரு நாட்களுக்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நினைத்தார். அதற்கு தமிழக சட்டமன்ற சபாநாயகரும் ஒத்துழைப்பு வழங்கினார். இதையடுத்து, 18-02-2017 அன்று சட்டமன்றம் அவசரமாக கூட்டப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமைகளுக்கும், பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டிய சபாநாயகர் அவர்கள் அது பற்றி கவலைப்படாமல் சட்டமன்றத்தை கூட்டியதோடு மட்டுமின்றி, எம்.எல்.ஏ–க்கள் தங்களுடைய சுய விருப்பத்தின் பேரில் சட்டமன்றக் கூட்டத்தில் சுதந்திரமாகவும், மனப்பூர்வமாகவும் பங்கேற்றுள்ளார்களா என்பதையும் அறிய முற்படவில்லை. முன்னாள் காவல்துறை இயக்குனரும் தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ. வாக இருப்பவருமான ஒருவர் மக்களின் விருப்பப்படியே நம்பிக்கை வாக்கெடுப்பில் செயல்படப் போவதாக அறிவித்தும், சட்டவிரோதமாக அடைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து ஒரு அதிமுக எம்.எல்.ஏ. கோயம்புத்தூருக்கு தப்பிச் சென்ற நிலையிலும், கூவத்தூர் ஓய்வு விடுதியில் அடைக்கப்பட்டு தனியாக கார்களில் அழைத்து வரப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் சுயமாக இந்த அரசுக்கு ஆதரவு அளிக்கிறார்களா என்பது பற்றி தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அறிந்து கொள்ள எவ்வித அக்கறையும் காட்டவில்லை.
இத்தகைய ஒரு சூழலில், நம்பிக்கை தீர்மானத்தின் முக்கியத்துவம் காரணமாக, ஒரு பொறுப்புள்ள எதிர் கட்சியாக, மொத்தமுள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 89 உறுப்பினர்கள் கொண்டுள்ள திமுக, “ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” அல்லது “கிட்டதட்ட 14 நாட்கள் சட்டவிரோதமாக விடுதியில் அடைக்கப்பட்டு இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் வகையில் ஒரு சூழ்நிலை உருவான பிறகு வேறு ஒரு தேதியில் வாக்கெடுப்பை நடத்த வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்து, நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ஒரு வார காலம் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், திமுகவின் நியாயமான அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள பிடிவாதமாகவும், தன்னிச்சையாகவும் மறுத்த சட்டப் பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாக முடிவெடுத்து, அடைக்கப்பட்டு அழைத்து வரப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அன்றைய தினமே நம்பிக்கை தீர்மானத்தில் வாக்களிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் சட்டவிரோதமாக பணிகளை மேற்கொண்டார். எனவே, திமுக, காங்கிரஸ், இந்திய முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகத்தை நிலை நாட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன், ஜனநாயக ரீதியிலும், அமைதியான வழியிலும் மேற்கொண்ட போராட்டம் அர்த்தமற்றததானது. அந்தநிலையில், அவைக்காவலர்களின் சீருடை அணிந்து தங்களுடைய அடையாளங்களை மறைத்திருந்த மாநகர காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவை சேர்ந்த காவலர்களை அவைக்குள் கொண்டு வந்து, சட்டபூர்வ வழிகாட்டுதல்கள் எதையும் பின்பற்றாமல், சட்டவிரோதமாகவும், வலுக்கட்டாயமாகவும் திமுகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் அவையிலிருந்து வெளியேற்றினார். மற்ற எதிர் கட்சி உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளி நடப்பு செய்யும் கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். முன் கூட்டியே திட்டமிட்டு, பலப்பிரயோகம் செய்வதற்கு ஏற்றவகையில், தங்களுக்கு கட்டுப்பட்டுள்ள சில கூடுதல்/இணை/துணை காவல்துறை ஆணையர்களாக பணியாற்றும் இந்திய காவல் பணி அதிகாரிகளை அவைக்குள் நுழைய வைத்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மூர்க்கத்தனமாக அவையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால் ஏற்பட்ட குழப்பத்திற்கு இடையில், இப்படிப்படியொரு வாய்ப்பிற்காக காத்திருந்ததது போல, சபாநாயகர் அவை வாக்கெடுப்பை அவசரமாக மேற்கொண்டது ஏற்கத்தக்கதல்ல என்பதோடு, அரசியலமைப்பு மற்றும் கட்சித்தாவல் தடை சட்டத்தின் நோக்கங்களுக்கு முற்றிலும் விரோதமானதாகும்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் உள்ள மிக அடிப்படை அம்சங்கள் கூட பின்பற்றப்படாமல், சட்டமன்றத்தில் பொறுப்பற்ற முறையில் பல விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. சட்டமன்றத்தில் ஏற்பட்ட அமளிக்கு இடையில், புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருப்பது, உண்மையான, சட்டரீதியிலான நம்பிக்கை வாக்கெடுப்பை சட்டமன்றத்தில் நடத்துவதில் சபாநாயகர் தோல்வியடைந்து விட்டதை வெளிப்படுத்துகிறது. இதைத்தொடர்ந்து, உடனடியாக நாங்கள் ராஜ்பவனுக்கு விரைந்து மாண்புமிகு தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து, 18-02-2017 அன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும் என முறையிட்டுள்ளோம்.
“அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு சட்டமன்றத்திற்கு கட்டுப்பட்டது” என்பதுதான் அரசியல் சட்டத்தின் மாண்பு மற்றும் பாராளுமன்ற ஜனநாயகத்தில் நிறுவப்பட்டுள்ள அடிப்படைக் கொள்கை. அதன் அடிப்படையில் தான், முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவரை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி மாண்புமிகு ஆளுநர் அவர்கள் அழைப்பு விடுக்கிறார். சட்டமன்றத்தில் அமைச்சரைவையின் கூட்டுப் பொறுப்பு என்பது, சட்டமன்றத்தில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை பெற்றிருப்பதே ஆகும். ஆனால் தனியார் விடுதியில், தனியார் நிறுவனங்களின் பாதுகாப்பில் 14 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து வந்து ஒரு வாக்கெடுப்பை நடத்தும் போது, அது போன்ற வாக்கெடுப்பிற்கு அவர்கள் சுய விருப்பத்தில் வந்திருக்கிறார்களா என்பதைக் கூட பரிசோதனை செய்யாமல் அரசியல் சட்ட முறைகளையும், வாக்கெடுப்பு நடைமுறைகளையும் மீறி ஒரு சட்டவிரோதமான வாக்கெடுப்பை சபாநாயகர் அவர்கள் நடத்தியிருக்கிறார். ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த கட்சிக்கு “பலத்தை நிரூபியுங்கள்” என்று இரண்டு முக்கியமான நோக்கங்களுக்காக ஆளுநர் உத்தரவிடுகிறார். ஆட்சி அமைக்கக் கோரிய சட்டமன்ற கட்சி தலைவரை தான் அழைத்தது சரியானது என ஆளுநர் திருப்தி அடைந்து கொள்வது முதல் நோக்கம். ஆளுநர் நியமித்த முதலமைச்சருக்கு சட்டமன்றத்தில் அறுதி பெரும்பான்மை இருக்கிறது என்பதை வாக்களித்த மக்களுக்கு தெரிவிப்பது இரண்டாவது நோக்கம். ஆனால் தமிழக சபாநாயகர் 18.2.2017 அன்று நடத்திய நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இந்த இரண்டு நோக்கங்களையும் தோற்கடித்து விட்டது.
பிரபல ‘Sapru Jayakar Motilal C.R.Das VS Union of India And others (AIR 1999 Pat 221)’ என்ற வழக்கில் பாட்னா உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் வழங்கியுள்ள தீர்ப்பில், ‘சட்டமன்றத்தில் வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகள் மற்றும் ஒழுங்கு விதிகள், ஆளுநரின் விருப்ப அதிகாரங்களை கட்டுப்படுத்தாது. அதே நேரத்தில், நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நடத்த ஒரு நடைமுறையை சட்டமன்றம் உருவாக்கிக் கொள்ள தடை ஏதுமில்லை” என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது. எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பை கோருகின்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு வார காலமாக சிறைபிடிக்கப்பட்டு, இறுக்கமான மனநிலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களின் சுய விருப்பத்தைப் பரிசோதிக்க “ரகசிய வாக்கெடுப்பு” நடத்த உத்தரவிடும் அதிகாரம் சபாநாயகருக்கு நிச்சயமாக இருக்கிறது. ஆனால், தமிழக சபாநாயகர் அவர்கள் அரசியல் சட்டத்தின் மாண்பு, கட்சித் தாவல் தடை சட்டத்தின் நோக்கம், பாராளுமன்ற ஜனநாயகத்தின் அஸ்திவாரமான “அமைச்சரவை கூட்டுப் பொறுப்பு தத்துவம்” ஆகியவற்றை நிலை நாட்ட தவறி விட்டார். எனவே, தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து தீர்மானம் வென்றதாக அறிவிக்கப்பட்டு இருப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானதும், அவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நடைமுறைகளை கேலிக்கூத்தாக்குவதாகவும் அமைந்து விட்டது.
ஆகவே, “அரசியல் சட்டம்” மற்றும் “பாராளுமன்ற ஜனநாயகம்” “தமிழக அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு” ஆகிய உயர்ந்த தத்துவங்களை, கொள்கைகளைப் பாதுகாக்கும் பொருட்டு 18-02-2017 அன்று தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சட்டத்திற்கு எதிரான நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ரத்து செய்து, ரகசிய வாக்கெடுப்பு முறையில், தமிழக சட்டமன்றத்தில் புதிய நம்பிக்கை தீர்மானம் வாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கும்படி, மேதகு குடியரசுத் தலைவர் அவர்கள், மாண்புமிகு தமிழக பொறுப்பு ஆளுநர் அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
மு.க.ஸ்டாலின்