இந்திய இராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு தேர்வுக்கான கேள்வித்தாள் கசிந்தது தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 350 நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இராணுவத்தில் பல்வேறு பணிகளுக்கு ஆள் சேர்ப்பதற்கான தேர்வு 26.02.2017 அன்று மகாராஷ்டிராவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தேர்வு பயிற்சி மையம் ரூ. 2 லட்சம் பெற்றுக்கொண்டு தேர்வுக்கான கேள்வித்தாளை லீக் செய்து விட்டதாக தானே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த கேள்வித்தாளை பெற்றுள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தானே மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக புனே, நாக்பூர், நாசிக், மற்றும் கோவாவில் 25.02.2017 இரவு சோதனை நடத்தி 350 நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 18 பேரை கைது செய்தனர்.
இராணுவ தேர்வுக்காக தயார் செய்யப்பட்ட கேள்வித்தாளுடன், கசிந்ததாக கூறப்படும் கேள்வித்தாளை ஒப்பிட்டு பார்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்த விசாரணை தொடர்பாக இராணுவத்திற்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் இராணுவ தேர்வு ரத்து செய்யப்பட்டு விட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இராணுவ தேர்வு கேள்வி தாள்களையே பாதுகாக்க முடியாதவர்கள், எப்படி இராணுவ இரகசியங்களை பாதுகாக்க போகிறார்கள்?