வங்கிகளில் செலுத்தப்படும் பணம் மற்றும் தகவல்கள் இந்த அரசாங்கத்தில் பாதுகாப்பாக இல்லை என்று, காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதை உறுதி செய்யும் வகையில்தான் வங்கிகளின் செயல்பாடுகளும் தற்போது உள்ளது.
மாதத்துக்கு 4 முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்தாலோ அல்லது பணத்தை எடுத்தாலோ குறைந்தப்பட்சம் ரூ.150-ஐ கட்டணமாக தனியார் வங்கிகள் வசூலிக்கத் தொடங்கியுள்ளன.
இதுதொடர்பாக ஹெச்.டி.எஃப்.சி. வங்கி வெளியிட்ட அறிவிப்பில், மிகவும் குறைந்தபட்ச இருப்புத் தொகையுடைய சாதாரண சேமிப்பு கணக்குகளுக்கு மாதத்துக்கு 4 முறை இலவசமாக பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளலாம். பணத்தை டெபாசிட் செய்வதற்கும் எந்த கட்டணமும் கிடையாது. ஆனால், 4 முறைக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தாலும், திரும்ப எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஹெச்.டி.எஃப்.சி. வங்கி அறிவித்துள்ளது.
இதேபோல், ஐசிஐசிஐ, ஆக்சிஸ் ஆகிய தனியார் வங்கிகளில் 4 முறைக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தாலும், திரும்ப எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளன.
ஐசிஐசிஐ வங்கியைப் பொறுத்தமட்டில், நவம்பர் மாதம் 8-ஆம் தேதிக்கு முன்பு அமலில் இருந்த கட்டண வசூலிப்பு நடைமுறை பின்பற்றப்படுகிறது. தேவைப்பட்டால், கட்டணம் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஸ் வங்கியைப் பொறுத்தமட்டில், முதல் 5 ரொக்க பரிவர்த்தனைகள் அல்லது ரூ.10 லட்சத்தை ரொக்கமாக டெபாசிட் செய்தல் அல்லது திருப்பி எடுத்தல் இலவசமாகும். அதன் பிறகு ஆயிரம் ரூபாய்க்கு ரூ. 5 அல்லது ரூ.150-ல், எந்தத் தொகை அதிகமாக உள்ளதோ, அந்தத் தொகை பிடித்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.