மாற்றுத்திறனாளிகள் மீது நீங்கா பற்றும், பாசமும் வைத்திருப்பவர் தலைவர் கலைஞர். கழக ஆட்சியில் தன் தலைமையிலேயே தனித்துறையை மாற்றுத் திறனாளிகளுக்காக உருவாக்கி, அவர்களுக்கு இந்தப் பெயரும் சூட்டி, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு சிறக்க பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியதை யாரும் மறந்து விட முடியாது.
மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம் என்றதும் தனது காலை உணவைக்கூட அருந்தாமல் ஓடோடிச்சென்று அவர்களை சந்தித்த தலைவர் கலைஞர், அவர் தலைமையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் மாற்றுத்திறனாளிகளின் பக்கம் நிற்கும்.
ஆகவே, மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசுவது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்றைக்கும் உடன்பாடானது அல்ல என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிலையில் என்னை நேரில் சந்தித்த ராதாரவி, தான் அவ்வாறு பேசியதற்கு தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார்.
திமுகவை எப்போது விமர்சிக்கலாம் என்று காத்திருப்போருக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்துவிடாத வகையில் பொதுமேடைகளில் அதிமுக ஆட்சியின் அவலங்களை மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்லுமாறு கழக நிர்வாகிகளையும், தலைமைக்கழக பேச்சாளர்களையும் கேட்டு கொள்கிறேன்.
-கே.பி.சுகுமார்.