தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் மீதான வாட் எனப்படும் மதிப்புக் கூட்டு வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. பெட்ரோல் மீதான வாட் வரி 27 விழுக்காட்டில் இருந்து 34% ஆக உயர்த்தப்பட்டிருப்பதால் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.78 உயர்ந்து ரூ.74.39 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி 21.43 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக உயர்த்தப் பட்டிருப்பதால், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.76 அதிகரித்து ரூ.62.49 ஆக உள்ளது. எந்த தேவையுமின்றி பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இன்னும் இரு வாரங்களில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், வரி மாற்றம் குறித்த அறிவிப்புகளை அதில் வெளியிட்டிருக்கலாம். ஆனால், புதிய வரிகள் இல்லாத நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே வரிகளை உயர்த்துவது மிகப்பெரிய மோசடியாகும்.
2011-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக ரூ.20,000 கோடிக்கு வரிகளை உயர்த்தி விட்டு, நிதிநிலை அறிக்கையில் வரிகளை உயர்த்தவே இல்லை என்று தனக்குத்தானே பெருமிதப்பட்டுக் கொண்டார். அவரது வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமியிடமிருந்து இத்தகைய மோசடிகளே மட்டுமே எதிர்பார்க்க முடியும்.
மத்திய, மாநில அரசுகள் வாக்குவங்கி அரசியலுக்காக தேவையற்ற திட்டங்களை செயல்படுத்தி மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கின்றன; ஊழல்கள் செய்து மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கின்றன. இதனால் ஏற்படும் இழப்பை ஈடு செய்வதற்காக பெட்ரோல், டீசல் மீது வரிகளை சுமத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. இது மிக மிக மோசமான பொருளாதார அணுகுமுறையாகும்.
உதாரணமாக, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.39-க்கு விற்கப்படும் நிலையில், அதன் உற்பத்திச் செலவு ரூ.28.73 மட்டும் தான். அதன்மீது மத்திய அரசு கலால் வரியாக ரூ.21.48 வசூல் செய்கிறது. தமிழக அரசு லிட்டருக்கு ரூ.18 வரியாக வசூலிக்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்கள் கமிஷனாக ரூ.5.41 வழங்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை ரூ.28.73 எனும் போது அதன்மீது வரி மற்றும் கமிஷனாக ரூ.45.66, அதாவது 161% வசூலிக்கப்படுகிறது என்பதிலிருந்தே மக்களை மத்திய அரசும், மாநில அரசும் எந்த அளவுக்கு சுரண்டுகின்றன என்பதை உணர முடியும்.
அதேபோல், ஒரு லிட்டர் டீசலின் அடக்கவிலை ரூ.29.17 மட்டுமே. அதன்மீது வரிகள் மற்றும் கமிசனாக ரூ.33.32 நுகர்வோரிடமிருந்து பறிக்கப்படுகிறது. மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத பெட்ரோல், டீசல் மீது இவ்வளவு வரியை வசூலிப்பது பகல் கொள்ளையை விட பயங்கரமானது ஆகும்.
தமிழக அரசின் நிதிநிலைமை மிகவும் மோசமாக இருப்பது உண்மை தான். அதை சரி செய்ய அரசின் வருவாயை பெருக்க வேண்டும் என்பதும் சரியானது தான். ஆனால், அதற்கு ஆயிரமாயிரம் வழிகள் இருக்கும் போது, அவற்றை விடுத்து நேரடியாக மக்களை பாதிப்பும் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை உயர்த்துவது ஏற்கமுடியாதது ஆகும்.
உதாரணமாக, தமிழகத்தில் தனியார் முகவர்கள் மூலம் நடைபெறும் மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தினால் ஆண்டுக்கு ரூ.35,000 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். அதை செய்யாமல் ரூ.1500 கோடி கூடுதல் வருவாய் ஈட்டுவதற்காக அனவரையும் பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துவது எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாதது ஆகும்.
பெட்ரோல் மீதான வாட் வரி 34% ஆக உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் மராட்டியத்துக்கு அடுத்தபடியாக அதிக வாட் வரி வசூலிக்கும் மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகம் பெற்றிருக்கிறது. கடந்த காலங்களில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தும் போதெல்லாம் ஜெயலலிதா கண்டனம் தெரிவிப்பார். அப்போது,‘‘மிக அதிக அளவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டதன் காரணமாக சரக்கு கட்டணங்கள் அதிகரிக்கும். அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும். அதிகரித்து வரும் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும். ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிப்படையும்’’ என்று ஜெயலலிதா கூறுவது வாடிக்கை.
இப்போது தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப்படுவார்களா… இல்லையா? என்பதை முதலமைச்சர் பழனிச்சாமி விளக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி உயர்த்தப்பட்டிருப்பதால் ஏழை, எளிய மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் கருத்தில் கொண்டு வரி உயர்வை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
-ஆர்.மார்ஷல்.