மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை கோரி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முதலில் காவல் துறை அனுமதி தராமல் இருந்தது. தற்போது காவல்துறையின் அனுமதியுடன் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என்று ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் மதுசூதனன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டுள்ளார்.
உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் மதுசூதனன், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன், உள்பட திரைத் துறையைச் சேர்ந்த அதிமுகவினர் பலரும் பங்கேற்று உள்ளனர்.
செங்கல்பட்டில் நடைபெறும் போராட்டத்துக்கு வா.மைத்ரேயன், ஆவடியில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், கிருஷ்ணகிரியில் கே.பி.முனுசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதர பகுதிகளில் அந்த அந்த மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் தலைமை வகித்து உள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாவட்டத் தலைநகரங்களிலும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
-ஜே.செல்வகுமார்.